Uttar Pradesh | Mayawati | Lok Sabha Election 2024: நாடு முழுதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் தனித்துப் போட்டியிடும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி), ஆளும் பா.ஜ.க மீதான தாக்குதலைக் கூர்மைப்படுத்தி, முஸ்லீம் சமூக வாக்குகளை கவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: In UP fray, BSP outdoes INDIA in fielding Muslim faces, sparks ‘vote-cutter’ blowback
தேர்தலில் முஸ்லீம் முகங்களை முன்னிறுத்துவதில் மும்முரம் காட்டி வரும் மாயாவதி, இதுவரை அறிவித்துள்ள 72 வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் உட்பட முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த 20 வேட்பாளர்களை பெயரிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் எந்த முக்கியப் கட்சியினராலும் நிறுத்தப்பட்ட அதிகபட்ச முஸ்லீம் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். சில இடங்களில், அதன் மூத்த தலைவர்களை கழற்றி விட்டு புதிய முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் கிழக்கு உத்தர பிரதேசத்தில் உள்ள பூர்வாஞ்சல் தொகுதியில், பி.எஸ்.பி சமீபத்தில் அதன் வேட்பாளரான பீம் ராஜ்பருக்குப் பதிலாக, மாநிலக் கட்சியின் முன்னாள் தலைவரான பாஸ்மாண்டா (பிற்படுத்தப்பட்ட) முஸ்லிம் பெண் சபிஹா அன்சாரியை நியமித்தது. பாஸ்மாண்டா முஸ்லிம்கள் மற்றும் சமூகத்தின் பெண் வாக்காளர்களை கவர, இது நேரடித் தாக்கும் முயற்சியாகக் கூறப்படுகிறது.
தற்போது பா.ஜ.க வசம் உள்ள சமாஜ்வாடி கட்சியின் (எஸ்.பி) கோட்டையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் உறவினரான தர்மேந்திர யாதவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பி.எஸ்.பி தனது வேட்பாளரை மாற்றிய பிறகு, சபிஹாவின் அன்சாரி இனக் குழுவைக் குறிப்பிடும் வகையில், 'நெசவாளர்களின் மகள்' என்ற கருப்பொருளில் அஸம்கர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டது. அஸம்கர் மாவட்டம் மட்டுமின்றி, பதோஹி, மௌ மற்றும் வாரணாசி உள்ளிட்ட அதன் அண்டை மாவட்டங்களிலும் நெசவாளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
முன்னாள் காங்கிரஸ் தலைவரான சபியா (36), உத்தர பிரதேச காங்கிரசின் சிறுபான்மை பிரிவு பொறுப்பாளராக இருந்துள்ளார். 2022 மாநில சட்டமன்றத் தேர்தலிலும் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவருக்கு சீட் மறுக்கப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அன்சாரியின் கணவர் மஷ்ஹோத் அகமது, “புர்வாஞ்சல் வரலாற்றில், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக நெசவாளர்களின் மகளுக்கு சீட் கொடுக்க தைரியம் காட்டியவர் மாயாவதி. சபிஹா அன்சாரி படித்தவர் மற்றும் பாஸ்மாண்டா சமூகத்தின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். சட்டமன்றத் தேர்தலில் ‘லட்கி ஹன், லட் சக்தி ஹன்’ என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கிய நிலையில், நெசவாளர் சமூகத்தின் மகள் மீது நம்பிக்கை காட்டியவர் மாயாவதி." என்று கூறினார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்கள் போட்டியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளத் துணிந்த அகமது, இப்போது வாக்குப்பதிவு மத்திய மற்றும் கிழக்கு உ.பி.யை நோக்கி நகர்ந்துள்ளதால், "முஸ்லீம் சமூகம் தங்களின் உண்மையான நலம் விரும்பிகள் யார் என்று பார்க்கிறார்கள்" என்றும் அவர் கூறினார்.
வாரணாசி, கோரக்பூர், மகாராஜ்கஞ்ச், பதோஹி, அம்பேத்கர்நகர் மற்றும் சந்த் கபீர் நகர் உள்ளிட்ட கிழக்கு உ.பி.யில் உள்ள தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை பகுஜன் சமாஜ் கட்சி நிறுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில், பகுஜன் சமாஜ் கட்சி நியாஸ் அலியையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மண்ணான கோரக்பூரில் ஜாவேத் சிம்னானியையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
மேற்கு உ.பி.யில், சஹாரன்பூரில் மஜித் அலி, ராம்பூர் தொகுதியில் ஜீஷன் கான், அம்ரோஹாவில் முஜாஹித் ஹுசைன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பிலிபிட்டில் அனீஸ் அகமது, சம்பல் தொகுதியில் சவுகத் அலி, மொராதாபாத்தில் இர்பான் சைஃபி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அகிலேஷின் மற்றொரு உறவினரும் ஷிவ்பால் சிங் யாதவின் மகனுமான ஆதித்யா யாதவ் போட்டியிடும் படவுனில், பி.எஸ்.பி முஸ்லிம் கானை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
ஃபிரோசாபாத்தில், பி.எஸ்.பி சௌத்ரி பஷீரை முன்னிறுத்தி, அதன் வேட்பாளர் சத்யேந்திர ஜெயின் முன்பு நிறுத்தப்பட்டது. சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும், அகிலேஷின் மாமாவுமான ராம்கோபால் யாதவின் மகன் அக்ஷய் இத்தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக உள்ளார்.
மத்திய உ.பி.யில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் எஸ்.பி வேட்பாளர் ரவிதாஸ் மஹ்ரோத்ரா ஆகியோருக்கு எதிராக லக்னோவில் சர்வார் மாலிக்கை பி.எஸ்.பி நிறுத்தியுள்ளது. அகிலேஷ் போட்டியிடும் கன்னோஜ் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி இம்ரான் பின் ஜாபரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தனது பிரச்சாரத்தில் சிறுபான்மையினருக்கு ஆதரவான நற்சான்றிதழ்களை முன்னிலைப்படுத்தி, முஸ்லிம் சமூகத்தினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதாகக் கூறி வருகிறது. சமீபத்தில் படாவுனில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மாயாவதி, சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் கூட முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதில் எஸ்.பி கட்சி "தோல்வியடைந்துவிட்டது" என்று குறிப்பிட்டார். இது சம்பந்தமாக படவுன் வழக்கை மேற்கோள் காட்டி, எஸ்.பி தனது முதல் குடும்ப உறுப்பினருக்கு எப்படி சீட் கொடுத்தது என்று அவர் கூட்டத்தில் கூறினார்.
போட்டிக் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள, பகுஜன் சமாஜ் கட்சி மேலிடம், “சீட் கொடுக்கும் போது யாரிடமும் பாரபட்சம் காட்ட மாட்டோம். மக்கள் தொகையில் அவர்களின் பங்கிற்கு ஏற்ப அவர்களுக்கு சீட் வழங்குகிறோம்" என்று கூறியிருக்கிறது.
அயோன்லா மற்றும் சம்பல் போன்ற சில இடங்களை பகுஜன் சமாஜ் கட்சி முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்திய நிகழ்வுகளையும் மாயாவதி மேற்கோள் காட்டினார். இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் முறையே 62 இடங்களிலும், 17 இடங்களிலும் உ.பி.யில் போட்டியிடுகின்றன. சமாஜ்வாதி இதுவரை பெயரிட்ட 60 பேரில் - ராம்பூர், சம்பல், கைரானா மற்றும் காஜிபூர் ஆகிய இடங்களில் நான்கு முஸ்லிம் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது.
காங்கிரஸ் இதுவரை அறிவித்த 15 வேட்பாளர்களில், இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர். முன்னாள் பி.எஸ்.பி எம்.பி டேனிஷ் அலி அம்ரோஹா தொகுதியிலும், இம்ரான் மசூத் சஹரன்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் போட்டியாளர்களான சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், சிறுபான்மை வேட்பாளர்களை தங்கள் ஆதரவுத் தளத்தைக் குறைக்கவும், இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கியைக் கெடுக்கவும், பா.ஜ.க-வுக்கு ஆதாயம் அளிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளன என்று குற்றம் சாட்டியு வருகின்றனர். பி.எஸ்.பி-யை வாக்குகளை பிரிக்கும் கட்சி என்று அழைக்கும் இந்தியா கூட்டணி, அக்கட்சியை "பாஜகவின் பி-டீம்" என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
இத்தகைய குற்றச்சாட்டுகளை நிராகரித்து, பி.எஸ்.பி தரப்பு பதிலடி கொடுத்துள்ளது, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் "தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் சரியான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதில் தோல்வியுற்றது" என்று குற்றம் சாட்டியுள்ளது.
உ.பி.யின் மக்கள் தொகையில் முஸ்லிம் சமூகம் சுமார் 19% ஆக உள்ளது. முக்கியமாக உ.பி.யின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சுமார் 16 நாடாளுமன்றத் தொகுதிகளில் முஸ்லீம் சமூகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
உத்தர பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க இதுவரை 73 வேட்பாளர்களை அறிவித்துள்ளது, அவர்களில் எவரும் முஸ்லிம் வேட்பாளர்கள் இல்லை என்பது இங்கு குறிபிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.