மக்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்ற முயன்றதாகக் கூறி புதிய மதமாற்ற எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேச ஷாஜகான்பூர் போலீசார் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் மக்களை கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்ற முயன்றதாகக் கூறி அம்மாநில புதிய மதமாற்ற எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஷாஜகான்பூர் போலீசார் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆதாரங்களை சேகரித்து அதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஷாஜகான்பூர் எஸ்.பி எஸ்.ஆனந்த் தெரிவித்தார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த 5 பேரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் தங்கள் குழந்தைகளுக்கு வேலை மற்றும் நல்ல கல்வி வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்டவிரோதமாக மதமாற்றத் தடைச் சட்டம் 2020ன் கீழ் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் டேவிட், ஜெகன் ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்ற 3 பேர்களும் ஷாஜகான்பூரி வசிப்பர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், புகார் அளித்துள்ள ராம் லகானிடம் சுமார் 10 நாட்களுக்கு முன்பு விகாஸ் நகர் காலனியில் உள்ள ஒரு வீட்டில் பிரார்த்தனையில் கலந்துகொள்ளுமாறு ஒருவர் கேட்டுக்கொண்டதாக கூறினார் என்று தெரிவித்தனர்.
அவர் ஞாயிற்றுக்கிழமை அந்த இடத்திற்குச் சென்றபோது ஷிரிஷ் குப்தாவின் வீட்டில் பிரார்த்தனையில் கலந்துகொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 30 பேரைக் பார்த்துள்ளார்.
அவர்களில் சிலர் "நல்ல வேலை மற்றும் குழந்தைகளுக்கு நல்ல கல்வி" அளிப்பதாக வாக்குறுதி அளித்து கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற மக்களை நம்ப வைப்பதாகத் தெரிந்தது என்று புகார்தாரர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார்கள் என்று ராம் லகான் கூறினார். விரைவில், உள்ளூர் இந்து ஆர்வலர்கள் குழு ஒன்று அங்கு வந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"