உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து மாவட்ட அதிகாரிகளின் கூற்றுப்படி, 45 இருக்கைகள் கொண்ட பயணிகள் பேருந்து இன்று காலை கர்வாலில் உள்ள பவுரியில் இருந்து குமாவோனில் உள்ள ராம்நகருக்குச் சென்று கொண்டிருந்த போது மார்ச்சுலா என்ற இடத்தில் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்தில் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்வால் மோட்டார் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பேருந்து, விபத்துக்குள்ளான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்பு பணியை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். தாமி தனது X பக்கத்தில், இந்த விபத்து வருத்தமளிப்பதாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நிர்வாகம் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் குழுக்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல துரிதமாக செயல்பட வேண்டும். பலத்த காயமடைந்த பயணிகளை தேவைப்பட்டால் விமானத்தில் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஆர்டிஓ அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“