உத்தரகாண்டில் கடும் நிலச்சரிவு - மாயமான 9 தொழிலாளர்களின் நிலை என்ன? சார்தாம் யாத்திரை நிறுத்தம்!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சனிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, தொழிலாளர் முகாம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் 9 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சனிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, தொழிலாளர் முகாம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் 9 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Uttarkashi landslide

உத்தரகாண்டில் கடும் நிலச்சரிவு - 9 தொழிலாளர்களின் நிலை என்ன?

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சனிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, தொழிலாளர் முகாம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் 9 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். இந்த நிலச்சரிவு சிலாய் பந்த் அருகே யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ தொலைவில், பாலிகட் அருகே நிகழ்ந்துள்ளது. கனமழை காரணமாக சார்தாம் யாத்திரை ஒரு நாள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Advertisment

மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தகவல்படி, நிலச்சரிவில் சிக்கிய முகாமில் இருந்த 19 தொழிலாளர்களில் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான மற்ற 9 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தரகாசியில் நிலச்சரிவில் சிக்கி மாயமான 9 தொழிலாளர்களையும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். துஜே லால் (55), கேவல் தாபா (43), ரோஷன் சவுத்ரி (40), விமலா ராணி (36), கல்லுராம் சவுத்ரி (55), பாபி (38), சோட்டு (22), பிரியன்ஷ் (20), மற்றும் மனிஷ் தாமி (40). முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் அந்தப் பகுதியில் ஒரு ஹோட்டல் கட்டுமானப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அளித்த தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.12 மணியளவில் பலத்த மழை குறித்த தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் ஒரு கூட்டுப் படையை சம்பவ இடத்திற்கு அனுப்பியது. காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), வருவாய்த் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த குழுவினர் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரகாசியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக யமுனோத்ரி நெடுஞ்சாலையின் சுமார் 10-12 மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சார்தாம் யாத்ரீகர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) அதிகாரிகள், பலத்த மழை காரணமாக ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

மீட்புப் பணிகளுக்காக SDRF குழு உடனடியாக அனுப்பப்பட்டாலும், சாலை மூடப்பட்டதால் குழுவினர் கால்நடையாகவே சம்பவ இடத்தை அடைந்தனர். "முகாமில் 19 பேர் தங்கியிருந்தனர், நிலச்சரிவு ஏற்பட்டபோது பலர் ஓடிவிட்டனர். மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததாக நாங்கள் கருதுகிறோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன," என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

"பொதுமக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு, யாத்ரீகர்கள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் எந்தவித வதந்திகளையும் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும், நம்பகமான தகவல்களை மட்டுமே நம்பி, அவசர காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட துறைகளை மட்டுமே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்," என்று மீட்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, சார்தாம் யாத்திரை ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக கார்வால் ஆணையர் வினய் சங்கர் பாண்டே அறிவித்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உடைமைகளை உறுதி செய்யும் வகையிலும், யாத்திரை செல்லும் வழியில் பக்தர்கள் எவ்வித சிரமத்திற்கும் ஆளாகாமல் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காகவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டு, நிவாரணம் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வானிலை மற்றும் சாலை நிலவரத்தை மறுபரிசீலனை செய்தபின் திங்கள்கிழமை யாத்திரையை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஆணையர் பாண்டே கூறினார். வானிலை மேம்படும் வரை நிர்வாகத்தால் வெளியிடப்படும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும், யாத்திரைத் தலங்களை நோக்கிச் செல்ல வேண்டாம் என்றும் பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Uttarakhand

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: