மொபைல் போனில் லுடோ விளையாடுவது, இயற்கையான நீரில் குளிப்பது, பொறி மற்றும் ஏலக்காய் சுவை – உத்தரகாசி சுரங்கப்பாதைக்குள் நீண்ட நேரம் செலவழித்தது 32 வயதான சாம்ரா ஓரானுக்கு ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் வசிக்கும் ஓரான், செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஓரான், புதிய காற்றின் வாசனை ஒரு புதிய வாழ்க்கை போல உணர்ந்தேன். எங்களைக் காப்பாற்றிய பெருமை, 17 நாட்கள் அயராது உழைத்த மீட்புப் படையினருக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் உரித்தானது, என்றார்.
’வணக்கம்! நான் நலமுடன் இருக்கிறேன். நாங்கள் கடவுளை நம்பினோம், அது எங்களுக்கு பலத்தை அளித்தது. 41 பேர் சிக்கியிருப்பதால், எங்களை யாராவது காப்பாற்றுவார்கள் என்றும் நம்பினோம். என் மனைவியுடன் பேச வேண்டும். இதற்கு மேல் என்னால் காத்திருக்க முடியாது. என் மூன்று குழந்தைகள் எனக்காக குந்தியில் காத்திருக்கின்றனர்.
மாதம் ரூ.18 ஆயிரம் சம்பாதிக்கிறேன், நான் திரும்பி வருவேனா, இல்லையா என்பதை "காலம்தான் சொல்லும்" என்ற ஓரான் நவம்பர் 12ம் தேதி நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
’அதிகாலையில் நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, பலத்த சத்தம் கேட்டது, இடிபாடுகள் விழுந்ததைக் கண்டேன்.
நான் என் உயிருக்காக ஓடினேன், ஆனால் தவறான பக்கத்தில் சிக்கிக்கொண்டேன். நாங்கள் நீண்ட நேரம் அங்கே இருப்போம் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. நாங்கள் சோர்வுடனும், பசியுடன் இருந்தோம். ஆனால் நாங்கள் உதவிக்காக அமைதியாக பிரார்த்தனை செய்தோம். நான் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை.
சுமார் 24 மணி நேரம் கழித்து, அதிகாரிகள் பொறி மற்றும் ஏலக்காய் அனுப்பி வைத்தனர். முதல் சாதத்தை நாங்கள் சாப்பிட்டபோது, மேலே யாரோ எங்களை அணுகியதை உணர்ந்தோம்; நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நாங்கள் காப்பாற்றப்படுவோம் என்று நம்பினோம், ஆனால் நேரத்தை கடக்க வேண்டியிருந்தது.
எனவே நாங்கள் மொபைல் போனில் லுடோவில் மூழ்கிவிட்டோம், எங்களுக்கு வழங்கப்பட்ட சப்ளை மூலம் சார்ஜ் போட முடிந்தது, இருப்பினும் நெட்வொர்க் இல்லாததால் எங்களால் யாரையும் அழைக்க முடியவில்லை. எங்களுக்குள் பேசி ஒருவரையொருவர் தெரிந்து கொண்டோம்.
நாங்கள் இயற்கையான மலை நீரைப் பயன்படுத்தி குளித்தோம். எங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள, நாங்கள் ஒரு இடத்தை ஒதுக்கியிருந்தோம்.
இப்போது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உறுதியாக இருக்கிறேன். வீட்டிற்குச் சென்ற பிறகு அடுத்து என்ன செய்ய வேண்டும், என்று முடிவு செய்ய வேண்டும்’, என்று ஓரான் கூறினார்.
மறுபுறம், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளியான 26 வயதான விஜய் ஹோரோவின் குடும்பத்தினர், அவர் இனி மாநிலத்திற்கு வெளியே வேலைக்கு செல்ல வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளனர்.
’விஜய் ஆம்புலன்சில் இருந்து என்னிடம் பேசினார், அவர் மகிழ்ச்சியடைந்தார். எங்களிடம் கவலைப்பட வேண்டாம், அவர் நல்ல நிலையில் இருக்கிறார், என்று அவரது சகோதரர் ராபின் கூறினார்.
’நாங்கள் இருவரும் படித்தவர்கள். நாங்கள் ஜார்கண்டில் வேலை தேட முயற்சிப்போம், ஆனால் எங்களுக்கு பணம் தேவைப்பட்டால், வேறு இடங்களில் குறைவான ஆபத்துள்ள வேலைகளைத் தேடுவோம்’, என்றார்.
Read in English: Tunnel insider speaks: ‘Restless, hungry, prayed silently, never lost hope’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.