Manoj C G
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததிலிருந்து காங்கிரஸ் கட்சியை பாதிக்கும் வகையில் ஒரு நிச்சயமற்ற தன்மையும் குழப்பமும் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், காங்கிரஸ் எம்.பி சசிதரூர், தலைமை குறித்த குழப்பம் காங்கிரஸ் கட்சியை பாதிக்கிறது என்று கூறிய கருத்துடன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமைப்பின் பொறுப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உடன்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சிறந்த தேர்வு என்றும் அவர் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெறுவார் என்றும் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்த கருத்திலிருந்து காங்கிரஸ் மாறுபடவில்லை அல்லது முரண்படவில்லை. இது குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவிக்கையில், காங்கிரஸ்காரர்கள் தங்கள் பார்வையை வெளிப்படுத்த உரிமை உண்டு என்று கூறியது.
சசிதரூரின் கருத்து குறித்து வேணுகோபால் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “சசி தரூர் கூறியது சரியல்ல. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராஜினாமா செய்தார் என்பது சரிதான். ஆனால், ராகுல் காந்தி ராஜினாமா செய்த நேரத்தில், அவர் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கும் வரை தனது கடமையை செய்வேன் என்று கூறியுள்ளார். மேலும், ராகுல் காந்தி முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவருடைய பங்களிப்பை சிறப்பாக செய்துவருகிறார். அதனால், சசி தரூர் கூறியது சரியானது அல்ல. காங்கிரஸ் முரட்டுத்தனமாக இல்லை.” என்று கூறினார்.
மேலும், வேணுகோபால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் செயற்குழு விரைவில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும் என்று கூறினார்.
அமரிந்தர் சிங்கின் கருத்து குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறுகையில், “கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது, அது கட்சிக்கு புறம்பான பிரச்னைகள் குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. கட்சிக்குள்ளான விவகாரங்களில் நாங்கள் ஒரு ஜனநாயகக் கட்சி என்பதால் மக்கள் தங்கள் பார்வையை வெளிப்படுத்த உரிமை உண்டு” என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்கள், கட்சி தலைமை குறித்த குழப்பம் கட்சியை பாதிக்கிறது என்பதை ஒத்துக்கொண்டுள்ளனர்.
இது குறித்து, மூத்த காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “கட்சியில் சில விஷயங்கள் நடக்க வேண்டும். அது எப்போது நடக்கும், என்ன நடக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், தலைமை குறித்த குழப்பம் நிச்சயமாக கட்சியை பாதிக்கிறது. கட்சியில் நிலவும் தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மையால் மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், அமைதியின்மையும் பதற்றமும் உள்ளது. பல மாநிலங்களில் நடந்த சம்பவங்களிலிருந்து கவலை வெளிப்படுகிறது. சமீபத்தில் கர்நாடகாவில் அரசாங்கம் வீழ்ந்தது. மேலும், தெலுங்கானா, கோவா, மற்றும் மகாராஷ்டிராவில் கட்சி கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் எந்த போர்த்திட்டமும் இல்லை.” என்று கவலை தெரிவித்தார்.