தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா ஏற்பட்டாலும் மருத்துவமனை சேர்க்கை விகிதம் குறைவு

Vaccinated healthcare workers’ data show a fall in hospitalisation: தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா ஏற்பட்டாலும் மருத்துவமனை சேர்க்கை விகிதம் குறைவு – சுகாதார ஊழியர்களிடையே சி.எம்.சி நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனாவின் கடுமையான இரண்டாவது அலைகளை எதிர்கொள்ளும் சுகாதாரப் பணியாளர்கள், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் மூலமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், ஆக்ஸிஜன் சிகிச்சை மற்றும் ஐ.சி.யூ சேர்க்கை குறைந்துள்ளதாக சி.எம்.சி ஆய்வின் முதற்கட்ட தகவல்கள் காட்டுகின்றன என்று நாட்டின் தொற்றுநோய்க்கான பணிக்குழுவின் தலைவரான டாக்டர் வி.கே.பால் கூறுகிறார்.

வேலூர் – கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரியின் தரவுகளைப் பற்றி குறிப்பிடுகையில், ஒரே ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்கள் உட்பட 8,991 தடுப்பூசி போடப்பட்ட சுகாதாரப் பணியாளர்களில், ஐ.சி.யூ சேர்க்கையைத் தடுப்பதில் தடுப்பூசிகளின் பங்கு 94 சதவீதம் வரை அதிகமாக இருப்பதாக டாக்டர் பால் குறிப்பிட்டுள்ளார். இது தொற்று ஆபத்து அதிகம் உள்ள குழுக்களிடையே தடுப்பூசிகள் கடுமையான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன என்பதைக் காட்டுகிறது.

“தடுப்பூசிக்குப் பிறகு பாதுகாப்பைக் காட்டும் ஆய்வுகள் இந்தியாவில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிக ஆபத்துள்ள குழுக்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் குறித்து இதுபோன்ற இரண்டு ஆய்வுகள் உள்ளன. தடுப்பூசிக்குப் பிறகு, மருத்துவமனையில் சேர்ப்பதற்கான தேவை 75-80 சதவீதம் குறைகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு உங்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், தரவுகளின்படி, மருத்துவமனையில் சேர்க்கும் வாய்ப்பு வெறும் 20 சதவீதம் தான் ”என்று டாக்டர் பால் கூறினார்.

“ஆக்ஸிஜன் தேவைப்படுவதற்கான சாத்தியம் வெறும் 8 சதவிகிதம் மட்டுமே, தீவிரமான ஐ.சி.யூ சேர்க்கைக்கான ஆபத்து 6 சதவிகிதம் மட்டுமே என்பதை தரவுகள் காட்டுகின்றன. எனவே, பாதுகாப்பு 94 சதவீதமாகிறது. இது ஒரு நியாயமான அளவு ஆய்வின் சக்திவாய்ந்த தரவு, ஏனெனில் இந்த ஆய்வு தொற்றுநோய் ஏற்பட ஆபத்து அதிகமாக இருக்கும் இடத்தில் செய்யப்பட்டது. ஒரு ஆய்வில், 7000 ல், ஒரு மரணம் மட்டுமே இருந்தது; அந்த நபருக்கு கூட இணை நோய்கள் இருந்தன. தடுப்பூசிகள் குறிப்பாக கடுமையான நோயிலிருந்து பாதுகாப்பை வழங்குவதை இந்த தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன, ”என்று டாக்டர் பால் கூறினார்.

பிப்ரவரி 21 மற்றும் மே 19 க்கு இடையில் அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று ஏற்பட்ட சுகாதார ஊழியர்களிடையே ஆய்வு நடத்தப்பட்டது. ஆர்டி பி.சி.ஆர் சோதனையில் பாசிட்டிவ் ஆன 1,350 பேரும் மற்றும் இரண்டாவது தடுப்பூசி அளவைப் பெற்ற இரண்டு வாரங்களுக்குள் தொற்றுநோயை உருவாக்கிய 33 பேரும் ஆய்வில் கலந்துக் கொண்டனர் என்று சி.எம்.சி நடத்திய ஆய்வை பற்றி டாக்டர் பால் குறிப்பிடுகிறார்.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 7,080 சுகாதார ஊழியர்களில், 679 பேர் இரண்டாவது டோஸுக்கு 47 நாட்களுக்குப் பிறகு தொற்றுநோயை உருவாக்கினர். “தொற்றுநோயைத் தடுப்பதில் தடுப்பூசியின் பாதுகாப்பு விளைவு, மருத்துவமனையில் சேருதல், ஆக்ஸிஜன் தேவை மற்றும் ஐ.சி.யூ சேர்க்கை ஆகியவை முறையே 65 சதவீதம், 77 சதவீதம், 92 சதவீதம் மற்றும் 94 சதவீதம் ஆகும்” என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த ஒரே ஊழியருக்கும் இணை நோய்கள் இருந்தன என்றும் மேலும் அவர் தடுப்பூசி எடுக்கவில்லை என்பதையும் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

வேலூர் சி.எம்.சி யின் கண்டுபிடிப்புகள் பிற உயர்மட்ட மருத்துவமனைகளால் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளுக்கு ஏற்ப உள்ளன.

புதன்கிழமை, 24 நகரங்களில் 43 மருத்துவமனைகளைக் கொண்டுள்ள நாட்டின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையான அப்பல்லோ, தடுப்பூசி போடப்பட்ட அதன் 31,000 சுகாதார ஊழியர்களில் பூஜ்ஜிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அப்பல்லோவில் ஜனவரி 16 முதல் மே 31 வரை 1,355 சுகாதாரப் பணியாளர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 90 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மேலும் மூன்று பேருக்கு மட்டுமே ஐ.சி.யூ. சிகிச்சை தேவைப்பட்டதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மே 17 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் குழுவுடன் உரையாடியபோது, ​​”முன்கள வீரர்களுடன் தடுப்பூசி திட்டத்தைத் தொடங்குவதற்கான உத்தி இரண்டாவது அலைகளில் கடினமாக இருந்தது” என்று வலியுறுத்தினார். “நாட்டில் சுமார் 90% சுகாதார வல்லுநர்கள் ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துள்ளனர். தடுப்பூசிகள் பெரும்பாலான மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன, ”என்று மோடி கூறினார்.

இரண்டாவது அலையின் மிக மோசமான கட்டத்தின் போது, ​​இந்த ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து, 1.75 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது, அதே நேரத்தில் கொரோனா காரணமாக குறைந்தது 2.25 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

வயது வந்தோருடன் ஒப்பிடுகையில் குழந்தைகளிடையே செரோபோசிட்டிவிட்டி விகிதம் அதிகமானது என்றும் இரண்டாவது அலையின் போது குழந்தைகளிடையே தொற்று லேசானது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது என்றும் எய்ம்ஸ்-டபிள்யு.எச்.ஓ ஆய்வு பற்றி டாக்டர் பால் குறிப்பிட்டார்.

“இருப்பினும், குழந்தை சார்ந்த சிகிச்சை, ஆக்ஸிஜனேற்றம், காற்றோட்டம் ஆகியவற்றிற்கு எதிர்கால தேவை இருந்தால் … நாங்கள் முழுமையாக தயாராக இருப்போம். தனியார் மற்றும் பொதுத் துறை மருத்துவமனைகளில், ஏற்பாடுகளில் எந்த இடைவெளிகளும் இருக்காது ”என்று டாக்டர் பால் கூறினார்.

புதுப்பிக்கப்பட்ட குழந்தை பராமரிப்பு வழிகாட்டுதல்களை செயல்படுத்துவது குறித்து மாநிலங்களுடன் இந்த வாரம் ஒரு கூட்டம் நடத்தப்பட்டதாக டாக்டர் பால் கூறினார். “நாங்கள் குழந்தைகளுக்கான சிகிச்சைக்கு தயாராக இருக்க வேண்டும். முன்னதாக இதற்கான வேலைகளும் செய்யப்பட்டு வந்தன. சிகிச்சை நெறிமுறை, எத்தனை சேவைகள் உருவாக்கப்பட வேண்டும், எத்தனை வென்டிலேட்டர்கள் தேவை, மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பின்னர் ஏற்படும் மல்டி சிஸ்டம் அழற்சி நோய்க்குறியை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றி இப்போது விரிவாகப் பார்க்கிறோம், ”என்றும் அவர் கூறினார்.

டாக்டர் பாலின் கூற்றுப்படி, கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரித்து வருகிறது. மே-ஜூன் மாதங்களில் வழங்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளிலும் 53 சதவீதம் கிராமப்புறங்களில் வழங்கப்பட்டன. எனவே, புதிய வழிகாட்டுதல்களுடன், கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி மேலும் அதிகரிக்கும்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vaccinated healthcare workers data show a fall in hospitalisation

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com