ஒமிக்ரான் தொற்றின் பரவும் தன்மை, நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பித்தல், தீவிரத்தன்மை போன்றவை அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நமக்கு தெரிந்துவிடும் என எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார். மேலும் பேசிய அவர், கொரோனா தொற்றின் புதிய மாறுபாடுகளுக்கு எதிராக பாதுகாப்பை அளித்திட தடுப்பூசிகளை மாற்றியமைக்கலாம் என்றார்.
இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் YASHADA அகாடமியை சேர்ந்த டாக்டர் ஷிரிஷ் பிரயாக்கின் குடும்பத்தினர் இணைந்து நடத்திய 22வது டாக்டர் வி எஸ் பிரயாக் நினைவு சொற்பொழிவு-2021 நிகழ்ச்சியில் ரன்தீப் குலேரியா உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "தற்போது செயல்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை மாற்றியமைக்கலாம். அவை, கொரோனாவின் புதிய மாறுபாடிற்கு எதிராக பாதுகாப்பை வழங்கிடும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை தயாரிப்பது, வைரஸ் பிறழ்வுகளைத் தக்கவைக்க ஏற்கனவே உள்ள தடுப்பூசிகளை மாற்றியமைக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது.
இந்த செயல்முறையில் தடுப்பூசிகளில் குறைவான பலனைத் தரக்கூடிய பிறழ்வுகள் தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், தடுப்பூசிகளை மாற்றுவதன் மூலம் தற்போதைய சிக்கலைச் சமாளிக்க முடியும்" என்றார்.
மேலும் பேசிய அவர், சமீப காலங்களில் பறவைக் காய்ச்சல், H1N1 ,எபோலா, ஜிகா, நிபா வைரஸ் உள்ளிட்ட பல ஜூனோடிக் நோய்த்தொற்றுகள் உருவெடுத்துள்ளன. பயணம், வர்த்தகம், வளர்ந்து வரும் நகரமயமாக்கல் மற்றும் புதிய சூழலுக்குள் ஊடுருவல் ஆகியவை தொற்று நோய்கள் அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளது.
எதிர்கால தொற்றுநோய்களைத் தடுக்க பிராந்திய மற்றும் உலக அளவில் தீர்வுகளை கண்டறிய வேண்டும்" என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணரான டாக்டர் பரீக்ஷித் பிரயாக், கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸுக்கு வலுவான கோரிக்கையை முன்வைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil