மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட 5 பேர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்துவைக்க மாநிலங்களவை உறுப்பினர்களாக தமிழில் பதவியேற்றுக் கொண்டனர்.
அதிமுகவை சேர்ந்த அர்ஜூனன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்னவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, திமுகவின் கனிமொழி உள்ளிட்டோரின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம், கடந்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, நடப்புமாத துவக்கத்தில் புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மொத்தமுள்ள 6 இடங்களுக்கு திமுக சார்பில் இருவரும், அதிமுக சார்பில் சண்முகம் மற்றும் வில்சனும், அதிமுக சார்பில் முகம்மது ஜான் மற்றும் சந்திரசேகரன். திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக கூட்டணி சார்பில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே போட்டியிட்டதால், இவர்கள் அனைவரும் பொட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இன்று (ஜூலை 25ம் தேதி) நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் அனைவரும் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
அன்புமணி ராமதாஸ், இன்று பதவியேற்கவில்லை.
பதவியேற்ற அனைவருக்கும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
மத்தியில் உள்ள பாரதிய ஜனதா தலைமையிலான அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவது என போராட்டங்களை நடத்தி வந்த வைகோ, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அவர் நடத்தி வந்த போராட்டங்கள், இனி, நாடாளுமன்ற அவைகளிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.