/indian-express-tamil/media/media_files/2025/08/27/landslide-near-vaishno-devi-shrine-2025-08-27-13-32-05.jpg)
At least 30 dead after heavy rains trigger landslide near Vaishno Devi shrine; power, network outage in Jammu
ஜம்முவின் திரிகுட்டா மலைகளில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு செல்லும் வழியில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 30 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிகுட்டா மலைகளில் உள்ள அட்குன்வாரி பகுதியில் இந்த சோக நிகழ்வு நடந்தது.
கத்ரா நகரில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்லும் 12 கி.மீ. பயணப் பாதையில் பாதி வழியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக யாத்ரீகர்கள் பலர் அட்குன்வாரிக்கு அருகே உள்ள இந்திரபிரஸ்த போஜ்னாலயா அருகில் உள்ள இரும்பு கொட்டகையின் கீழ் தஞ்சம் புகுந்திருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நிலச்சரிவு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக்குழுவினர், இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கனமழை காரணமாக ஹிம்கோடி வழித்தடத்திலான யாத்திரை நேற்று காலை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பழைய பாரம்பரிய வழித்தடத்திலும் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
The loss of lives due to a landslide on the route to the Shri Mata Vaishno Devi Temple is saddening. My thoughts are with the bereaved families. May the injured recover at the earliest. The administration is assisting all those affected. My prayers for everyone's safety and…
— Narendra Modi (@narendramodi) August 27, 2025
இந்த துயர நிகழ்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது X பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். “ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளை நிர்வாகம் செய்து வருகிறது. அனைவரின் பாதுகாப்பிற்காகவும், நல்வாழ்வுக்காகவும் எனது பிரார்த்தனைகள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஜம்மு நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை சற்று குறைந்திருந்தாலும், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெரும்பாலான இடங்களில் மொபைல் நெட்வொர்க் சேவைகளும் சீர்குலைந்துள்ளன. இது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
ஜம்மு - ஸ்ரீநகர், பதோட்-டோடா-கிஸ்ட்வார் போன்ற முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், டோடா-பதேர்வா, தத்ரி-டண்டா, தாரா-ஜெய் ஆகிய சாலைகளும் மூடப்பட்டுள்ளன. 17 வீடுகளும், சில அரசு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மூன்று நடைபாதை பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஜம்மு நகரில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக, ஜம்மு மாகாணத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.