வாஜ்பாய் வளர்ப்பு மகள் நமிதா-கனிமொழி சந்திப்பு உருக்கமாக இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினர்.
வாஜ்பாய் மரணத்திற்கு அஞ்சலி செலுத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, திருச்சி சிவா எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சென்றனர். இன்று காலையில் வாஜ்பாய் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாய்க்கும் திமுக.வுக்கும் நீண்ட நட்பு உண்டு. 1980-களின் தொடக்கத்தில் ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதியுடன் இணைந்து மாநாடுகளில் பங்கேற்றவர் வாஜ்பாய். 1999 முதல் 2004 வரை வாஜ்பாய் அமைச்சரவையில் திமுக இடம் பெற்றிருந்த போதும் வாஜ்பாயுடன் கருணாநிதி நட்பு பேணினார்.
தவிர, அண்மையில் கருணாநிதி மரணத்திற்கு அஞ்சலி செலுத்தவும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது நலம் விசாரிக்கவும் காங்கிரஸைவிட பாஜக தலைவர்களே அதிகம் வந்தனர். இந்தப் பின்னணியில்தான் ஸ்டாலின் நேரடியாக டெல்லி சென்றார்.
வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதாவை சந்தித்து இவர்கள் ஆறுதல் கூறினர். திமுக தலைவர் கருணாநிதி மறைந்து 10 நாட்களே ஆன நிலையில் இவர்களைப் பார்த்த நமிதா நெகிழ்ச்சி அடைந்தார். கனிமொழியும், நமிதாவும் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து ஆறுதல் கூறிக் கொண்டது உருக்கமாக இருந்தது.