காவிரி போராட்டங்களை 16ம் தேதிக்குள் நிறுத்தாவிட்டால், தமிழக வாகனங்களை கர்நாடக எல்லைக்குள் அனுமதிக்க மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நடந்து வரும் போராட்டம் மிக மிக தீவிரம் அடைந்துள்ளது. இதன் விளைவு, இரண்டு ஆண்டு கழித்து ஐபிஎல்-லுக்கு திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்டங்களையே சென்னையில் இருந்து மாற்றியுள்ளது. அந்தளவிற்கு போராட்டம் வலுவடைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, இன்று சென்னை வந்த பிரதமர் மோடி, போராட்டம் காரணமாக, சாலை மார்க்க பயணத்தை தவிர்த்து, ஹெலிகாப்டரிலேயே பயணித்தார். அவர் செல்லும் இடமெங்கும், கருப்பு கொடி காட்டப்பட்டது. சென்னை ஐஐடி-க்கு அவர் சென்ற போதும், ஐஐடி மாணவர்கள் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினர். ஒட்டுமொத்தமாக, 'கோ பேக் மோடி' எனும் ஹேஷ்டேக், உலகளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்தது.
இதுஒருபுறமிருக்க, கர்நாடகாவில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் இன்று பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு எதிராக அவரது கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஏப்ரல் 16ம் தேதிக்குள் தமிழகத்தில் காவிரி தொடர்பான போராட்டங்களை நிறுத்த வேண்டும். ஏப்ரல் 16க்கு பிறகும் போராட்டம் தொடர்ந்தால், தமிழக வாகனங்களை கர்நாடகாவில் தடுத்து நிறுத்துவோம்" என்று எச்சரித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.