உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் அளித்துள்ள மனு தொடர்பாக துணைக் குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு சட்ட வல்லுநர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தீபஸ் மிஸ்ராவை தகுதி நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அளித்த இம்பீச்மென்ட் தீர்மானத்தை ஏற்பதா வேண்டாமா என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை இன்று(21.4.18) நாடுகிறார்.
வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம், நீதித்துறை மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது உள்ளிட்ட காரணங்களை கூறி கடந்த சில மாதங்களாகவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்ய இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்தன. நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மென்ட் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சிகள் நேற்று ராஜ்யசபா தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் இம்பீச்மென்ட் மனுவை அளித்தனர்.
மூத்த அரசு அதிகாரிகள் இருவரிடம் இது குறித்து வெங்கய்ய நாயுடு ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த தீர்மானத்தின் மீது இறுதி முடிவு எடுப்பதற்கு எந்த காலக்கெடுவும் விதிகள்படி இல்லை. கடந்த காலங்களில் இது போன்ற இம்பீச்மென்ட் தீர்மானம் அளிக்கப்பட்ட போது 3 அல்லது 13 நாட்கள் வரை அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். இம்பீச்மென்ட் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ராஜ்யசபா செயலகம் எம்.பிகளின் கையெழுத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்.
அதன் பிறகு ராஜ்யசபா தலைவர் தீர்மானத்தை ஏற்பது பற்றி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவார். வழக்கமாக ராஜ்யசபா தலைவர் தலைமை நீதிபதியுடன் இம்பீச்மென்ட் தீர்மானம் குறித்து விவாதிப்பார் ஆனால், இந்த தீர்மானம் தலைமை நீதிபதி மீதே அளிக்கப்பட்டுள்ளதால் மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது