2ஜி அலைக்கற்றை வழக்கின் பின்னணி: குற்றம் என்ன? குற்றம்சாட்டப்பட்டவர்கள் யார் யார்?

கனிமொழி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் மீதும், 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

கடந்த 2004-2009 மற்றும் 2009-2014 ஆகிய ஆண்டுகளில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு ஆட்சி புரிந்தது. அப்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக, உச்சநீதிமன்றம் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் மீதும், 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இதுதொடர்பாக, கடந்த ஆறு ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள், சிபிஐ, அமலாக்கப் பிரிவு தரப்பு ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஷைனி உத்தரவிட்டார்.

இதையடுத்து, நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பு தேதியை அறிவிப்பதில் பலமுறை காலதாமதம் செய்தார். இறுதியாக, டிசம்பர் 21-ஆம் தேதி (இன்று) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும், அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கின் பின்னணி:

2ஜி அலைக்கற்றையை தகுதியில்லாத நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்வதற்காக, லஞ்சம் பெற்றதாக, முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் மீது சிபிஐ குற்றம்சாட்டியது. மேலும், கரிம் மொரானி, தொழிலதிபர் ஷாஹித் பல்வா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னாள் நிறுவன இயக்குநர் கௌதம் தோஷி உள்ளிட்ட பலர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அ.ராசா மீதான குற்றச்சாட்டு என்ன?

கடந்த 2008-ஆம் ஆண்டு எஃப்.டி.எஃப்.எஸ். எனப்படும் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்போதைய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த அ.ராசா, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்காக அந்நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு விதிகளைமீறி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, அலைக்கற்றைகளை பெற விண்ணப்பிக்க கடைசி தேதியை அ.ராசா மாற்றியதாகவும், கடந்த 2001-ஆம் ஆண்டு வசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தின்படி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததாகவும் புகார் உள்ளது.

இதனால், அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பீடு ஏற்பட்டது என சிபிஐயும் , ரூ.1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டது என மத்திய கணக்கு மற்றும் தணிக்கை (சி.ஏ.ஜி.) அமைப்பும் குற்றம்சாட்டியது.

அ.ராசா அமைச்சராக இருந்தபோது அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்ட உரிமம் அனைத்தும் கடந்த 2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. ஏமாற்றுதல், மோசடி, குற்றச்சதி உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் அ.ராசா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த நவம்பர் 2010-ஆம் ஆண்டு அ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைதாகி சிறை சென்ற அவர், 2012, மே மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.

கனிமொழி மீதான குற்றச்சாட்டு:

ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில், திமுக எம்.பி. கனிமொழி ஆதாயம் அடைந்ததாகவும், கலைஞர் தொலைக்காட்சியுடன் அவருக்குண்டான தொடர்பு குறித்தும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் அடாக் குழுமத்தின் சார்பு நிறுவனம் எனவும், அதன்மூலம் 14 உரிமங்களை பெற்றதாகவும் சிபிஐ கடந்த 2015-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ரிலையன்ஸ் அடாக் குழுமத்தின் தோசி, சுரேந்திர பிபாரியா, ஹரி நாயர் ஆகியோரும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

எஸ்ஸார் டெலிஹோல்டிங்ஸ், லூப் டெலிகாம்:

எஸ்ஸார் டெலிஹோல்டிங்ஸ் நிறுவனம், தன் சார்பு நிறுவனமான லூப் டெலிகாம் நிறுவனத்தை பயன்படுத்தி அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எஸ்ஸார் நிறுவனத்தை சேர்ந்த ரவி ராவியா, அனுஷ்மன் ரூயா மற்றும் லூப் டெலிகாம் நிறுவனத்தை சேர்ந்த கிரண் கைத்தான், ஐபி கைத்தான் ஆகியோர் மீது குற்றச்சதி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவர்களும் குற்றம்சாட்டப்பட்டவர்கள்:

– யுனிடெக் வயர்லெஸ் நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் இயக்குநர் சஞ்சய் சந்திரா

– யுனிடெக் லிமிடெட் நிறுவனம்

– அ.ராசாவின் முன்னாள் தனிச்செயலாளர் ஆர்.கே.சண்டோலியா

– முன்னாள் தொலைத்தொடர்பு துறை செயலாளர் சித்தார்த்த பெஹ்ரூவா

– கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத் குமார்

– குசேகன் ஃபுரூட்ஸ் மற்றும் வெஜிடபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால்

சாட்சியங்கள்:

முன்னாள் அட்டார்னி ஜெனரல் ஜி.ஈ.வாஹன்வதி இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக உள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பது குறித்த செய்திக்குறிப்பில் கடைசி நேரத்தில் முன்னாள் அமைச்சர் அ.ராசா மாற்றம் செய்தார் என சாட்சியம் அளித்தார்.

ரிலையன்ஸ் அடாக் குழுமம், தன் சார்பு நிறுவனமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மூலம் 14 உரிமங்களை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை அனில் அம்பானி மறுத்துள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Verdict in 2g scam will be out today heres a recap

Next Story
2G Case Verdict : ஆ.ராசா – கனிமொழி விடுதலை, மேல் முறையீடு செய்ய இருப்பதாக சிபிஐ அறிவிப்பு2G Case Judgement LIVE UPDATES
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com