VHP objects, Delhi Police says no to Munawar Faruqui show: தேசிய தலைநகர் டெல்லியில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திட்டமிடப்பட்ட நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு கடிதம் எழுதிய ஒரு நாள் கழித்து, டெல்லி காவல்துறையின் உரிமம் வழங்கும் பிரிவு அனுமதி மறுத்துள்ளது. மத்திய மாவட்ட காவல்துறை “இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் மத நல்லிணக்கத்தை பாதிக்கும்” என்று உரிமம் வழங்கும் பிரிவுக்கு அறிக்கை அனுப்பியதை அடுத்து அனுமதி மறுப்பு வந்துள்ளது.
உரிமம் வழங்கும் பிரிவின் காவல்துறை இணை ஆணையர் ஓ.பி.மிஸ்ராவை தொடர்பு கொண்டபோது, உள்ளூர் (மத்திய) மாவட்ட காவல்துறையின் அறிக்கையைப் பெற்ற பிறகு அனுமதி நிராகரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார்.
இதையும் படியுங்கள்: டெல்லி ரகசியம்: ஓய்வுக்கு பிறகு ரொமான்டிக் நாவல் எழுதுகிறீர்களா?… தலைமை நீதிபதி ரமணா சுவாரஸ்ய பதில்
ஆகஸ்ட் 23 அன்று, மேற்கு டெல்லியில் உள்ள விஷ்ணு கார்டனில் வசிக்கும் விண்ணப்பதாரரான குர்சிமர் சிங் ராயத் என்பவருக்கு, ஆகஸ்ட் 28ஆம் தேதி நண்பகல் 2 மணி முதல் மாலை 9.30 மணி வரை டாக்டர் எஸ்.பி.எம் சிவிக் சென்டரில் உள்ள கேதார்நாத் சாஹ்னி ஆடிட்டோரியத்தில் முனாவர் ஃபரூக்கியின் நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்த உரிமம் வழங்கும் பிரிவு அனுமதி வழங்கியது.
ஆகஸ்ட் 25 அன்று, வி.ஹெச்.பி டெல்லி தலைவர் சுரேந்திர குமார் குப்தா போலீஸ் கமிஷனருக்கு கடிதம் அனுப்பினார். அதில், ஃபரூக்கி “தனது நிகழ்ச்சிகளில் இந்து கடவுள்களை கேலி செய்கிறார்” என்று குற்றம் சாட்டினார், மேலும் “ஹைதராபாத் பாக்யாநகர் மோதல்களை ஏற்படுத்தியதற்காக” ஃபரூக்கி மீது குற்றம் சாட்டினார். சுரேந்திர குமார் குப்தா வெள்ளிக்கிழமை காலை மத்திய மாவட்டத்தில் உள்ள மூத்த அதிகாரிகளைச் சந்தித்ததாகவும், கமலா மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தத்தாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி, உரிமம் வழங்கும் பிரிவில் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்தனர், அதில் நிகழ்ச்சி அப்பகுதியில் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் என்றும் உரிமம் வழங்கும் பிரிவு அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். உரிமம் வழங்கும் பிரிவு, மத்திய மாவட்டத்திலிருந்து அறிக்கையைப் பெற்ற பிறகு, அமைப்பாளருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது, அதில் அனுமதி ரத்து செய்யப்பட்டதாக அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
வி.ஹெச்.பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்: “நாங்கள் நகரத்தில் அமைதியை விரும்புகிறோம். அவர் நமது இந்து தெய்வங்களை கேலி செய்வதை நாங்கள் விரும்பவில்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாங்கள் நகரம் முழுவதும் போராட்டங்களை நடத்துவோம்… நாங்கள் டெல்லி காவல்துறை தலைமையகத்திற்கு கடிதத்தை சமர்ப்பித்தோம் மற்றும் கமிஷனருக்கும் மின்னஞ்சல் அனுப்பினோம். அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.”
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் நபிகள் நாயகத்தைப் பற்றி கருத்து தெரிவித்ததற்காக பா.ஜ.க.,வால் இடைநீக்கம் செய்யப்பட்டு மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்ட தெலுங்கானா எம்.எல்.ஏ டி.ராஜா சிங், ஹைதராபாத்தில் நடைபெற்ற ஃபரூக்கியின் நிகழ்ச்சிக்கு பதிலளிக்கும் விதமாக தனது வீடியோவை வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை வந்துள்ளது.
இந்தூரில் நடந்த நிகழ்ச்சியின் போது மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு ஃபரூக்கி பல எதிர்ப்புகளை எதிர்கொண்டார் மற்றும் கடந்த ஆண்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார். அவரது மேலாளர் நிதின் மெங்கானி, வி.ஹெச்.பி.,யின் புகார் குறித்து தனக்குத் தெரியும் என்றும், அமைப்பாளரிடமிருந்து விவரங்களுக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil