ராமர் கோயில் கட்டும் பிரசாரம் மற்றும் போராட்டத்தை நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க விஷ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், தர்ம சபா கூட்டம் நடைபெற்றது. அதில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, அவசர சட்டம் இயற்ற வேண்டும், ராமர் கோவில் கட்டும் பணியை துவக்குவதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தனர்.
ராமர் கோயில் போராட்டங்கள் நிறுத்தி வைப்பு
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரம் அடுத்த நான்கு மாதங்களுக்கு, அதாவது நாடாளுமன்றம் தேர்தல் முடியும் வரை பேசப்படாது என்று விஷ்வ ஹிந்து சார்பில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து வி.எச்.பி பொது செயலாளர் கூறுகையில், மத்தியில் புதிய அரசு அமைந்தவுடன் இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அயோத்தியில் 67 ஏக்கர் நிலத்தை திரும்பப் பெற அனுமதி கோரி, பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உச்சநீதிமன்றத்தை நாடிய ஒரு வாரத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் அளித்த பேட்டியில், “நாங்கள் அடுத்த நான்கு மாதங்களுக்கு எந்த போராட்டங்களையும் நடத்த மாட்டோம். ஏனென்றால் இந்த சமயம் ராமர் கோவில் குறித்து போராட்டங்களோ பேச்சுவார்த்தையோ நடத்தினால், அதுவும் தேர்தலுக்காக ஆதாயம் என்று கூறிவிடுவார்கள். இந்த விவகாரம் அரசியலுக்கு சம்பந்தப்படுத்துவதை அடுத்த 4 மாதங்களுக்கு தடுத்து நிறுத்தியுள்ளோம்” என்றார்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், வி.எச்.பி-யின் நிலைபாடு என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, “எங்கள் திட்டம் நீதிமன்ற உத்தரவின் பொருட்டல்ல. எந்தவொரு அவசர நிலைமையும் இருந்தால், நாங்கள் வழிகாட்டிகளிலிருந்து வழிகாட்டலைப் பெறுவோம். நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதமாக இருந்தால், அதுவும் விஎச்.பி.யின் முடிவை பாதிக்காது” என்று அவர் கூறினார்.
வி.எச்.பி-யின் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் பேசுகையில், மறுக்கப்படாத நிலத்தை திரும்ப பெற மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது ஒரு சிறந்த நடவடிக்கை என்றார். மேலும், “இப்போது எந்த பிரச்சனையையோ அல்லது இயக்கத்தையோ நாங்கள் அறிவித்தாலும், தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைப் பாதுகாப்பதற்காக நாங்கள் இதை செய்கிறோம் என்று கூறப்படும்.
இந்த புனிதமான இயக்கம் ஒரு அரசியல் பிரச்சினையாக ஆவதற்கு நாங்கள் விரும்பவில்லை. எனவே, தேர்தலில் மோதல்கள் அல்லது தவறான கருத்துகள் எந்தவொரு சூழ்நிலையிலும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிக்கலை அரசியலில் இழுக்க யாருக்கும் அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை.” என்றார்.
“நான்கு மாதங்களுக்கு பிறகு, விஎச்பி நிலைமையை மறுபரிசீலனை செய்து அதன் அடுத்த படியை திட்டமிடும். நங்கள் போராட்டங்கள் நடத்த மாட்டோம் ஆனால் மிகப் பெரிய விழிப்புணர்வு நகழ்ச்சிகளை நடத்துவோம். அப்போது பல்வேறு அரசியல் கட்சிகளும், ஆதரவு அளித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் பேசுவார்கள். ஆனால் எங்களுக்கு ஒருமித்த கருத்து வேண்டும்” என்று செயல் தலைவர் குமார் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.