உயர்கல்வி ஒழுங்குமுறை விதிகளை மீறி துணைவேந்தரை நியமிப்பது செல்லாது என்றும் அது சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தனது கடிதத்தில் கூறியுள்ளது.
சென்னை பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம், மற்றும் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகிய 3 பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பல்கலைக் கழக துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி தேடல் மற்றும் தேர்வுக் குழுவை அமைத்து செப். 6-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து ஆளுநர் அமைத்த துணைவேந்தர் தேடல் குழுவில் இடம் பெற்றிருந்த யு.ஜி.சி உறுப்பினரை தவிர்த்துவிட்டு தமிழ்நாடு உயர்கல்வித் துறை செயலர் செப்.13-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அரசின் நடவடிக்கைக்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்து துணை வேந்தர் தேடல் குழு அமைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அதை உடனே திருப்ப பெற வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நேற்று (அக்.5) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு யு.ஜி.சி கடிதம் எழுதியுள்ளது. அதில், உயர்கல்வி ஒழுங்குமுறை விதிகளை மீறி துணைவேந்தரை நியமிப்பது செல்லாது என்றும் அது சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளது.
யு.ஜி.சி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் கூறுகையில், துணைவேந்தர் பதவிக்கான தேடல் மற்றும் தேர்வு குழுவில் 3 முதல் 5 பேர் இடம்பெறுவர். இதில் ஒருவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இருப்பார்.
யுஜிசி விதிமுறைகளை மீறி பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் செல்லாது என்று கூறியுள்ளார்.
மேலும் குஜராத்தில் உள்ள சர்தார் படேல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமன வழக்கில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்ள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக செயல்பட்டால் அது விதிமீறல் மற்றும் சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“