Rahul Gandhi: நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 181 துணை வேந்தர்கள், கல்வியாளர்கள் இணைந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு ஒரு ஓபன் லெட்டர் (திறந்த மடல்) எழுதியுள்ளனர். அண்மையில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் பற்றி ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் அவர்கள் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர். ‘ஒளி தருபவர்கள் எரியூட்டப்படுகிறார்கள்’ என்ற தலைப்பில் அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: V-Cs, academics accuse Rahul of spreading rumours, seek action as per law
அந்தக் கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அண்மையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் பற்றி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அதில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பலரும் ஒரு குறிப்பிட்ட அமைப்புடன் சார்பு கொண்டிருப்பதாலேயே அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதாகக் கூறியிருக்கிறார். உண்மையில் துணை வேந்தர்கள் தேர்ந்தெடுக்கப்படும் செயல்முறையானது தகுதி, புலமை மற்றும் ஒருமைப்பாடு போன்ற மதிப்பீடுகளின் அடிப்படையில் கடுமையான, அதேவேளையில் வெளிப்படைத் தன்மை நிறைந்த நடைமுறைகளைக் கொண்டது.
அவ்வாறாக தேர்ந்தெடுக்கப்படும் நாங்கள் அறிவின் பாதுகாவலர்களாக, கல்வித் துறையின் நிர்வாகிகளாக நிர்வாக ஒருமைப்பாடு, நெறிமுறை, நடத்தை ஆகியவற்றின் உச்ச நிலைகளைப் பேணுவதில் உறுதியுடன் செயல்படுகிறோம். ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக ராகுல் காந்தி துணை வேந்தர் பதவியையே இழிவுபடுத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பானவற்றைப் பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும், புனைகதைகளிலிருந்து உண்மையை வேறுபடுத்துவதில் பகுத்தறிவைக் கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் நாங்கள் கடுமையாக கேட்டுக்கொள்கிறோம். மேலும், ஒரு மாறும் மற்றும் உள்ளடக்கிய கல்விச் சூழலை உருவாக்கும் எங்கள் பகிரப்பட்ட இலக்கை நன்கு அறிந்த, ஆக்கபூர்வமான மற்றும் ஆதரவளிக்கும் உரையாடலில் பங்கேற்கவும் வலியுறுத்துகிறோம்" என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ராகுல் காந்தி, “பா.ஜ.க ஆட்சியில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனம் என்பது தகுதியின் அடிப்படையில் நடைபெறவில்லை. ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததன் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகிறது” என்று விமர்சித்து இருந்தார். அதற்குக் கண்டனம் தெரிவித்தே இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்க தலைவர் மற்றும் மேகாலயா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.டி. சர்மா, இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்க துணைத் தலைவர் மற்றும் கான்பூர் சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வினய் பதக், இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்க பொதுச் செயலாளர் மற்றும் ஹரியானா பகத் பூல் சிங் மகளிர் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பங்கஜ் மிட்டல், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் மற்றும் கவுகாத்தி ஐ.ஐ.டி முன்னாள் இயக்குனர் டாக்டர் டி ஜி சீத்தாராம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்பேராசிரியர் அனில் சஹஸ்ரபுதே, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட், டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தர் யோகேஷ் சிங், ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் ராய்ப்பூர் இயக்குநர் ராம் குமார் ககானி உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.