மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் ஒரு தொழிலாளியின் மீது ஒருவர் சிறுநீர் கழிப்பதைக் காட்டும் வீடியோ, எதிர்க்கட்சியான காங்கிரஸிடம் இருந்து கடுமையான எதிர்வினையைத் தூண்டியது, குற்றவாளி ஒரு சிட்டிங் பா.ஜ.க எம்.எல்.ஏ.,வின் கூட்டாளி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அந்தக் குற்றச்சாட்டை பா.ஜ.க மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் அதிகாரிகளை கேட்டுக்கொள்ளவும் இந்த வீடியோ தூண்டியது.
“சித்தி மாவட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு வைரல் வீடியோ என் கவனத்திற்கு வந்துள்ளது. குற்றவாளியை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) விதிக்கவும் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்,” என்று சிவராஜ் சிங் சவுகான் ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்: மகாராஷ்டிராவில் பறந்த லவ் பாகிஸ்தான் பலூன்; மூவர் மீது எஃப்.ஐ.ஆர்
குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா மீது IPC பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள் மற்றும் பாடல்கள்), 504 (அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் SC/ST (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் நபர் ஒரு பழங்குடியினர் என்று போலீசார் தெரிவித்தனர்.
சித்தி மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரியா சிங், “வீடியோ எனது கவனத்துக்கு வந்துள்ளது. உள்ளூர் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. நானும் சம்பவ இடத்திற்கு சென்று உண்மைகளை ஆராய உள்ளேன். குற்றம் சாட்டப்பட்டவர் எம்.எல்.ஏ.வின் பிரதிநிதியா என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது; வழக்கின் உண்மைகள் முதலில் விசாரிக்கப்பட வேண்டும்,” என்று கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சித்தி எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லாவின் கூட்டாளி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. எம்.எல்.ஏ.,வின் செய்தித் தொடர்பாளரை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டபோது, “குற்றம்சாட்டப்பட்ட நபர் எம்.எல்.ஏ.,வின் பிரதிநிதி அல்ல. அவர் பா.ஜ.க உறுப்பினர் கூட இல்லை,” என்று கூறினார்.
உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ, குற்றம் சாட்டப்பட்டவர் தன்னுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டை மறுத்தார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் குறித்து கேட்டதற்கு, “நான் தொகுதிக்கு வெளியே செல்லும்போது என்னுடன் பலர் வருவார்கள். நான் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். அவர் பா.ஜ.க உறுப்பினர் இல்லை,” என்று எம்.எல்.ஏ கூறினார்.
“இந்த சம்பவம் குறித்து இதற்கு முன்பு யாரும் என்னிடம் புகார் அளிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிடும் வரை இதுபற்றி எனக்கு தெரியாது. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தச் செயலை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்த விவகாரத்தில் முதலமைச்சரின் நடவடிக்கையை ஆதரிக்கிறேன்” என்று எம்.எல்.ஏ கூறினார்.
மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல்நாத் இதற்கிடையில், "குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் மற்றும் மத்திய பிரதேசத்தில் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்" என்று கோரினார்.
“மத்திய பிரதேச மாநிலத்தின் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழிக்கும் கொடூரமான செயலைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பழங்குடி இளைஞரிடம் இத்தகைய இழிவான மற்றும் கீழ்த்தரமான நடத்தைக்கு நாகரீக சமுதாயத்தில் இடமில்லை. இந்த செயலில் ஈடுபட்ட நபர் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்களுக்கு மத்தியப் பிரதேசம் ஏற்கனவே பெயர் போனது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் நான் கோருகிறேன்" என்று கமல் நாத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச பழங்குடியினர் காங்கிரஸ் தலைவர் ராமு தேகம், “இப்போது மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லை... எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதி... குடிபோதையில் சிகரெட் பிடிக்கும் போது பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்தார்... சிவராஜ் சிங் தான் பழங்குடியினரின் பாதுகாவலர் என்று எப்படி கூறுகிறார் எனத் தெரியவில்லை; இன்று அவரது கட்சியின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,” என்று கூறினார்.
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்டவருக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று எம்.எல்.ஏ கூறியுள்ள நிலையில், இதுபோன்ற வெட்கக்கேடான சம்பவத்தில் காங்கிரஸ் ஏன் அரசியல் விளையாடுகிறது? இதில் பேசுவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, எனவே இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவருக்கு பா.ஜ.க.,வுடன் எந்த தொடர்பும் இல்லை,” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.