இந்திய அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் (இ.டி) வேண்டுகோளின் பேரில், வெளிநாட்டுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக பிரனாசில் உள்ள கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பிரெஞ்சு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு 1.6 மில்லியன் யூரோ ஆகும். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.14 கோடி ரூபாய் மதிப்புடையது என்று மத்திய விசாரணை நிறுவனம் வெளியிட்டுள்ல அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமலாக்க இயக்குனரகத்தின் வேண்டுகோளின் பேரில் பிரெஞ்சு அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த சொத்து பிரான்சில் 32 அவென்யூ ஃபோச்சில் அமைந்துள்ளது என்றும் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 (பி.எம்.எல்.ஏ) -இன் கீழ் நடத்தப்பட்ட விசாரணையின்படி, ஒரு பெரிய தொகை வெளிநாட்டிலிருந்து கிங்பிஷர் ஏர்லைன்ஸ் லிமிடெட் (கேஏஎல்) வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
திவாலான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சம்பந்தப்பட்ட ரூ.9,000 கோடிக்கு மேல் வங்கி கடன் கட்டத் தவறிய மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மல்லையா, மார்ச் 2016 முதல் இங்கிலாந்தில் இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்து யார்டால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் ஏப்ரல் 18, 2017 அன்று முதல் ஜாமீனில் வெளியே உள்ளார்.
நீதித்துறை மற்றும் சட்ட நடவடிக்கை ரகசியமானது என்பதால் இங்கிலாந்தில் ஒரு தனி ரகசிய சட்ட செயல்முறை தீர்க்கப்படும் வரை மல்லையாவை இந்தியாவுக்கு ஒப்படைக்க முடியாது என்று அந்நாடு தெரிவித்ததாக மத்திய அரசு அக்டோபர் 5ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கூறியது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”