இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த தயாராக இருப்பதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா முதன்முறையாக மவுனம் கலைத்து பேசியுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார். ஆனால் கடந்த மார்ச் மாதம் வாங்கி கடனையெல்லாம் திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். அதன் பின்பு, இந்தியாவிற்கு வந்த அவர், தன் மீதான வழக்குக்களை எதிர்கொள்வும், பதில் அளிக்கவும் மறுத்து விட்டார்.
இந்நிலையில், அவரது பாஸ்போர்ட்டு முடக்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறி வந்தது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் மல்லையா வாங்கிய கடன்கள் குறித்த விவரம் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வர தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அவர் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு தொடர்ந்தனர். சிபிஐ தரப்பிலும் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. தொடர்ந்து, கர்நாடகாவிலுள்ள மல்லையாவின் சில சொத்துகள் முடக்கப்பட்டன. மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரன்டும் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், இதை சற்றும் கண்டுக் கொள்ளாத விஜய் மல்லையா லண்டனில் 3 ஆவது திருமணம், ஆடம்பரமான வாழ்க்கை, கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளிப்பது என உல்லாசமாக வாழ்ந்து வந்தார். இரண்டு முறை போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினிலும் வெளியில் வந்தார். இந்நிலையில், 2 ஆண்டுகளாக வங்கிக் கடன் குறித்து பதில் அளிக்காமல் இருந்த மல்லையா தற்போது முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார். இதுக்குறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் மல்லையா கூறியிருப்பது, “ கடந்த 2016-ம் ஆண்டில் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை மீட்டெடுப்பதற்காகப் பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்றேன். கடனை திருப்பிச் செலுத்துவது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதியமைச்சருக்கும் கடிதமும் எழுதியிருந்தேன். கடன் வாங்கியபின் நாட்டிலிலிருந்து தப்பியோடிவிட்டதாக அரசியல்வாதிகள் என் மீது குற்றஞ்சாட்டினர். இந்த விவகாரத்தை மீடியாக்களும் பெரிதுபடுத்தின. வேண்டுமேன்றே நான் கடனை திருப்பி செலுத்தவில்லை என வங்கிகளும் குற்றஞ்சாட்டின.
மல்லையா எழுதிய கடிதம்
வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த தயாராக உள்ளேன். கடனை திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார். மேலும், மோடிக்கு எழுதிய கடிதத்தையும் விஜய் மல்லையா வெளியிட்டுள்ளார்.