/indian-express-tamil/media/media_files/2025/06/12/m3CS6TVzcIUHOnmSYDKI.jpg)
அகமதாபாத் விமான விபத்து: குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி மரணம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்ற அனைவரும் உயிரிழந்ததாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரும், குஜராத் மாநில பா.ஜ.க. தலைவருமான சி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார். விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி (68) பயணம் செய்திருந்தார். விமான விபத்தால் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி விஜய் ரூபாணி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் லண்டனில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக விமானத்தில் பயணம் மேற்கொண்ட நிலையில், விமான விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
பா.ஜ.க. தலைவரான ரூபானி, ராஜ்கோட் தொகுதியில் இருந்து குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, 2016 முதல் 2021 வரை குஜராத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
ரூபானி திங்கள்கிழமை ஏறிய, லண்டன் செல்லும் ஏஐ 171 விமானத்தில், 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டினர், 7 போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஒரு கனடா நாட்டவர் பயணித்தனர். இவர்களுடன் 2 விமானிகள் மற்றும் 10 விமானப் பணிப்பெண்களும் இருந்தனர். போயிங் 787 டிரீம்லைனர் ரக விமானமான இது, திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து சற்று தாமதமாக மதியம் 1.47 மணியளவில் புறப்பட்டு, அனுமதி கிடைத்து 9 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின் காணொளிக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. அதில், அகமதாபாத்தில் உள்ள கட்டிடங்களுக்குப் பின்னால் விமானம் தரையில் விழுந்து தீப்பிழம்புகளுடன் வெடித்துச் சிதறுவது தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.