குஜராத்தின் முதலமைச்சராக மீண்டும் பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி இன்று பதவியேற்றுக் கொண்டார். அதேபோல், நிதின் படேல் மீண்டும் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.
சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மொத்தம் உள்ள 182 இடங்களில், 99 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் தகுதியை பெற்றது. காங்கிரஸ் 77 இடங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தை பிடித்தது. மேலும், பாரதிய டிரைபல் கட்சி ஒரு இடத்தையும், தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியது. மற்ற மூன்று இடங்களை சுயேட்சை வேட்பாளர்கள் வென்றனர்.
இந்த வெற்றியின் மூலம், குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து ஆறாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது.
பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், நிதின் கட்காரி, ராம் விலாஸ் பஸ்வான், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அகமதாபாத்தில் உள்ள காந்திநகர் சாச்சிவாலயா மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் உட்பட 20 பேர் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.