இங்கே விஜயபாஸ்கர்... அங்கே சங்லியானா : நிர்பயா தாயாரின் அழகை வர்ணித்த முன்னாள் டிஜிபி

ஹெச்.டி.சங்லியானா... ஊழலுக்கு எதிரான ஐபிஎஸ் அதிகாரி இவர்! இன்று பெண்கள் குறித்த அவரது பார்வை, விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

ஹெச்.டி.சங்லியானா… கர்நாடகாவின் முன்னாள் டிஜிபி! ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற ஐபிஎஸ் அதிகாரி இவர்! இன்று பெண்கள் குறித்த அவரது பார்வை, விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

சங்லியானா அப்படி என்ன சொன்னார்? சாதனை படைத்த பெண்களை கவுரவிப்பதற்கான ஒரு நிகழ்ச்சி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்ச் 8-ம் தேதி நடைபெற்றது. இதில் ரூபா ஐபிஎஸ், கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்ஸில் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருது பெற்றனர்.

சங்லியானா, இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் விதிகளை மீறி சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதை அம்பலப்படுத்திய டி.ரூபா ஐபிஎஸ் ‘நிர்பயா’ விருது பெற்றார். நிர்பயா மரணத்தைத் தொடர்ந்து சளைக்காமல் சட்ட யுத்தம் நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த ஆஷா தேவியும் கவுரவிக்கப்பட்டார்.

சங்லியானா இந்த விழாவில் பேசுகையில், ‘நிர்பயாவின் தாயார் நல்ல உடல் அமைப்புடன் இருக்கிறார். அவரது தாயார் இப்படி இருக்கிறார் என்றால், நிர்பயா எவ்வளவு அழகாக இருந்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்!’ என குறிப்பிட்டார். ‘அழகான பெண்ணை சீரழித்துவிட்டார்களே!’ என்கிற ஆதங்கத்தில் சங்லியானா இதை சொல்ல நினைத்திருக்கலாம். ஆனால் அவரது தாயாரின் உடல் அமைப்பை குறிப்பிட்டு அவர் சொன்ன விதம் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

சங்லியானா அதோடு நிறகவில்லை. ‘கற்பழிப்பு கொடுமைக்கு ஆளாகிறவர்கள், தங்கள் மீதான பலவந்தம் அதிகமாக இருந்தால் சரண் அடைந்து விடவேண்டும். பின்னர் வழக்கில் குற்றவாளிகளை பார்த்துக் கொள்ளலாம்’ என குறிப்பிட்டார்.

நிர்பயா தயார் ஆஷா தேவியின் உடல் அமைப்பு குறித்தும், பெண்கள் சரண் அடைந்து விடுங்கள் என்றும் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு விளக்கம் தெரிவித்த சங்லியானா, ‘வேறு பிரச்னை இல்லை என்றவுடன் இதை பெரிதாக்குகிறார்கள். என்னைப் பார்த்து ஒருவர், ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்று கூறினால் நான் சந்தோஷப் படுவேன். எல்லை கடந்து இதில் நான் எதுவும் கூறவில்லை.

அதேபோல, பெண்களின் பாதுகாப்பு கருதி நான் கூறிய விஷயத்தையும் சர்ச்சை ஆக்குகிறார்கள். பெண்களின் உயிர் இருந்தால்தானே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும்?’ என வினா தொடுத்திருக்கிறார் சங்லியானா.

‘சங்லியானா போன்று மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களின் பார்வையே இப்படி இருக்கிறது என்றால், இந்த நாடு பெண்களை நடத்தும் விதத்தில் இன்னும் எவ்வளவு முன்னேற வேண்டியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்’ என மகளிர் அமைப்புகள் சங்லியானா பேச்சை விமர்சித்துள்ளன. அதே விழாவில் விருது பெற்ற பெண் ஆளுமை ஒருவரும் மேடையில் சங்லியானாவின் பேச்சை விமர்சித்தார்.

இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பெண் செய்தியாளர் ஒருவரின் அரசியல் ரீதியிலான கேள்வியை தவிர்க்க விரும்பிய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், ‘நீங்க அழகா இருக்கீங்க!’ என திரும்ப திரும்ப கூறினார். பிறகு அது சர்ச்சை ஆனதும், ‘அனைத்து செய்தியாளர்களையும் சகோதர, சகோதரிகளாக பார்க்கிறேன்’ என விளக்கம் அளித்தார்.

பொது இடங்களில் பெண்களை பார்க்கும், பேசும், நடத்தும் விதத்தில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களே பாடம் படிக்க வேண்டியிருக்கிறது.

 

×Close
×Close