காஷ்மீர் ஆளுனர் ஆகிறாரா விஜயகுமார் ஐபிஎஸ்? போட்டியில் இன்னொரு முன்னாள் ஐபிஎஸ்

K.Vijaya Kumar IPS: விஜயகுமார் ஐபிஎஸ்.ஸுக்கு அந்தப் பகுதியின் பாதுகாப்பு விவரங்கள் அனைத்தும் அத்துப்படி!

First LT Governor Of Jammu and Kashmir: விஜயகுமார் ஐபிஎஸ், காஷ்மீர் ஆளுனராக பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவருடன் முன்னாள் உளவுத்துறை அதிகாரி தினேஷ்வர் ஷர்மா பெயரும் அடிபடுகிறது.

விஜயகுமார் ஐபிஎஸ், தற்போது ஜம்மு காஷ்மீர் ஆளுனர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகராக இருக்கிறார். 1975-ம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான கே.விஜயகுமார், 1995-1996 காலகட்டத்தில் தமிழகத்தில் தென் மண்டல ஐஜி.யாக பதவி வகித்தார். அப்போது விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அரங்கேறிய ஜாதிக் கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

அதன்பிறகு பல ஆண்டுகளாக தமிழக-கர்நாடக சிறப்புப் படைகளுக்கு டிமிக்கி கொடுத்த சந்தன வீரப்பனை முடிவுக்கு கொண்டு வந்ததும் இவரே! தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் தலைமைப் பொறுப்பை ஏற்று, வட கிழக்கு மாநிலங்களில் நக்சல் வேட்டையிலும் துடிப்பாக செயல்பட்டார். தற்போது காஷ்மீர் மாநில ஆளுனரின் ஆலோசகராகவும் மத்திய அரசு திருப்திப்படும் வகையில் பணியாற்றி வருகிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்திருக்கிறது. இவற்றில் ஜம்மு காஷ்மீர் லெஃப்டினண்ட் கவர்னர் பொறுப்பு சவால் மிக்கதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகுமார் ஐபிஎஸ்.ஸுக்கு அந்தப் பகுதியின் பாதுகாப்பு விவரங்கள் அனைத்தும் அத்துப்படி! எனவே அவரையே ஜம்மு காஷ்மீர் லெஃப்டினண்ட் கவர்னராக நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

அதேபோல பீகாரை பூர்வீகமாகக் கொண்டவரும், கேரளா பேட்ச் 1974-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியுமான தினேஷ்வர் ஷர்மா பெயரும் இந்தப் பதவிக்கு அடிபடுகிறது. மத்திய உளவுப் பிரிவின் முன்னாள் தலைவரான தினேஷ்வர் ஷர்மா, தற்போது காஷ்மீர் குறித்த ரகசிய தகவல்களை அரசுக்கு தெரிவிக்கும் பொறுப்பிலேயே இருக்கிறார். எனவே அவருக்கும் லெஃப்டினண்ட் கவர்னர் ஆகும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close