சசிகலாவுடன் விஜயசாந்தி சந்திப்பு: பின்னணி என்ன?

அரசியல் காய் நகர்த்தல் அடிப்படையில் விஜயசாந்தி இந்த சந்திப்பை நடத்தினாரா? என்கிற கேள்வி விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான பிரபல நடிகை விஜயசாந்தி, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசியது விவாதங்களை எழுப்பியிருக்கிறது. இதற்கான பின்னணி என்ன?

நடிகை விஜயசாந்தி, கடந்த 20 ஆண்டுகளாகவே அரசியலில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வருகிறார். 1998-ல் பாஜக.வில் இணைந்து இயங்கிய விஜயசாந்தி, பின்னர் தல்லி தெலங்கானா என்கிற தனிக் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து தனது கட்சியை தெலங்கானா ராஷ்டிரிய சமிதியில் இணைத்தார்.

அந்தக் கட்சி சார்பில் எம்.பி. ஆனவர், பின்னர் காங்கிரஸில் ஐக்கியமானார். அவரது அரசியல் முழுக்க ஆந்திரா மற்றும் தெலங்கானா எல்லைக்குள்தான்! தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக ஆதரவாளராக, குறிப்பாக மறைந்த ஜெயலலிதா மீது தீவிர அன்பு கொண்டவராக ஆரம்பம் முதல் தன்னை வெளிப்படுத்தி வந்திருக்கிறார் விஜயசாந்தி.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது பல முறை போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசியிருக்கிறார் விஜயசாந்தி. அந்த வகையில் வி.கே.சசிகலாவுடனும் அவருக்கு நெருங்கிய நட்பு உண்டு. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை சந்தித்து பேசினார் விஜயசாந்தி. அதேபோல நடராஜன் மறைந்த போதும். சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அந்த வகையில் நட்பு அடிப்படையில் நேற்று (ஜனவரி 4) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்து விஜயசாந்தி பேசியதாக தெரிகிறது. ஆனால் இன்றைய அரசியல் சூழலில் அவரது சந்திப்பு சில ஹேஷ்யங்களையும் எழுப்பத் தவறவில்லை.

குறிப்பாக தமிழ்நாடு அரசியலில் காங்கிரஸ் கட்சியை தனது அணிக்கு கொண்டு வர டிடிவி தினகரன் முயற்சித்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட திமுக.வுடன் தனது உறவை உறுதி செய்துவிட்டது. இந்தச் சூழலில் டிடிவி தினகரன் – சசிகலா தரப்பின் அரசியல் காய் நகர்த்தல் அடிப்படையில் விஜயசாந்தி இந்த சந்திப்பை நடத்தினாரா? என்கிற கேள்வி விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close