சபரிமலை கோவிலுக்குள் சென்று வந்த கனக துர்கா என்ற பெண்ணை கணவர் வீட்டில் வசிக்க கேரளா மல்லபுரம் கிராம நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஜனவரி 2ம் தேதி கனக துர்கா மற்றும் ஒரு பெண் கேரளா சபரிமலை கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்து திரும்பினார்கள். அதன் பிறகு பல எதிர்ப்புகள் மீறி ஜனவரி 15ம் தேதி அங்காடிப்புரம் என்ற ஊருக்கு திரும்பினார். ஆனால் அவரை ஊருக்குள்ளும், வீட்டிற்குள்ளும் வருவதை கனக துர்காவின் கணவரும் மாமியாரும் தடுத்தனர். பின்னர் அது வாக்குவாதமாக மாற, கனக துர்கா தாக்கப்பட்டார்.
கேரளா : கணவர் வீட்டிற்குள் செல்ல கனக துர்காவிற்கு அனுமதி
பின்னர் அவர் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டார். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கை செவ்வாய் கிழமை கிராம நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, தமது கணவர் வீட்டில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இது குறித்து கனக துர்காவின் சகோதரர் பரத் கூறுகையில், “கனக துர்கா வீட்டிற்கு சென்றாலும், அவரது கணவரும் குழந்தைகளும் வேறு வீடு எடுத்து தங்கும் வாய்ப்பு இருக்கிறது” என்றார். “கோவிலின் பாரம்பரியத்தை மீறியதற்காக அவள் மன்னிப்பு கேட்க வேண்டும். அவள் கணவர் இணைந்து வாழ விரும்பவில்லை. அதனால் வேறு வாடகை வீட்டிற்கு செல்ல அவர்கள் முடிவெடுத்துவிட்டனர். மேலும், இந்த அனுமதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்” என்றார்.
இந்நிலையில் சபரிமலை தொடர்பான விவகாரத்தில் கேரள அரசு தாக்கல் செய்த மனு உட்பட மொத்தம் 51 சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஜனவரி 22ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.