ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நேற்று வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதில், வினேஷ் போகத் ஹரியானாவின் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸில் இணைந்து இருப்பதை பா.ஜ.க உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவர்கள் இருவரைப் பற்றிய எந்த விமர்சனமும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை பா.ஜ.க அறிந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Vinesh, Bajrang in Cong: Singed already by wrestler protest, BJP expects no further damage in Haryana
பா.ஜ.க தலைவரும் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடந்த போராட்டங்களில் முன்னணியில் இருந்த வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரையும் "பொறியில் சிக்கவைத்ததாக" பா.ஜ.க குற்றம் சாட்டியிருந்தது. இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸின் ஆதரவு இருந்தது என்றும் சில பா.ஜ.க தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வினேஷ் போகத் குறித்து ஹரியானா முன்னாள் உள்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அனில் விஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வினேஷ் முழு நாட்டிற்கும் மகளாக மாறாமல் காங்கிரஸின் மகளாக மாற விரும்பினால், நாம் என்ன ஆட்சேபனை தெரிவிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், "அவர்களின் (காங்கிரஸின்) தூண்டுதலால்தான் (பிரிஜ் பூஷனுக்கு எதிராக) போராட்டங்கள் நடந்து வருகின்றன என்பதற்கு இதுவே சான்றாகும். இல்லையேல் இந்த விவகாரம் வெகு முன்னதாகவே தீர்க்கப்பட்டிருக்கும். காங்கிரஸ் இந்த வீரர்களை முதல் நாளிலிருந்தே தனது பக்கம் கொண்டு வர முயன்றது." என்றும் அனில் விஜ் கூறினார்.
மற்றொரு பா.ஜ.க தலைவர் பேசுகையில், "போராட்டம் ஏற்கனவே 'அரசியல் திருப்பத்தை' எடுத்துள்ள நிலையில், மல்யுத்த வீரர்களின் முடிவில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை." என்று கூறினார்.
பா.ஜ.க ஹரியானா தலைவர் மோகன் லால் படோலி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த சமீபத்திய பேட்டியில், காங்கிரஸ் மல்யுத்த வீரர்களை தனது அரசியலுக்கு "பயன்படுத்தியது", "அவர்களின் எதிர்ப்பால் பலம் பெற்றது, ஆனால் பதிலுக்கு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவில்லை" என்று கூறினார்.
விவசாயிகள் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தின் உச்சத்தில் இருந்தபோது முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் பேசுகையில், "வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா காங்கிரஸுடன் இணைந்திருப்பதை மல்யுத்த வீரர்களின் போராட்டத்துடன் வலுவான இணைக்கிறது. சமீபத்தில், இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர். தற்போது அவர்கள் அரசியல் பிரமையில் சிக்கிக்கொண்டுள்ளனர்" என்று இப்போது மத்திய அமைச்சராக இருக்கும் அவர் கூறினார்.
“அப்போது ஆரம்பித்தது இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இவர்கள் (மல்யுத்த வீரர்கள்) காங்கிரஸிடம் சீட்டு கேட்கிறார்கள். இதன் பொருள் அவர்களுக்கும் காங்கிரசுக்கும் லிங்க் (இணைப்பு) உள்ளது. அப்போது அது தெளிவாக இல்லை என்றால், இப்போது அது முற்றிலும் தெளிவாக தெரிகிறது." என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து அதிகம் பேச மறுத்த பிரிஜ் பூஷன், போராட்டத்தின் போது தான் கூறியது உண்மையாகி வருவதாக செய்தியாளர்களிடம் கூறினார். உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், "ஹரியானாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களான தீபேந்தர் சிங் ஹூடா மற்றும் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் எனக்கு எதிராக சதி செய்கின்றனர். முதல் நாளில் நான் எதைச் சொன்னேனோ, அதில் உறுதியாக இருக்கிறேன். இன்று, நாடு முழுவதும் இதையே கூறுகிறது." என்று அவர் கூறினார்.
ஹரியானாவைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறுகையில், விவசாயிகள் போராட்டம் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டங்களால் மாநிலத்தில் கட்சிக்கு ஏற்கனவே ஏற்பட்ட சேதத்தை கருத்தில் கொண்டு, போகாத் காங்கிரஸில் இணைவதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
உண்மையில், ஒலிம்பிக் பதக்கம் மறுக்கப்பட்டதற்காக தேசிய வீராங்கனையாகக் கொண்டாடப்பட்ட பிறகு, அரசியலில் இறங்குவதற்கான போகத்தின் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அந்த மக்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பார்கள் என்று அர்த்தம் இல்லை." என்று அவர் கூறினார்.
பா.ஜ.க பஞ்ச்குலா எம்.எல்.ஏ-வும் சட்டமன்ற சபாநாயகருமான ஜியான் சந்த் குப்தா பேசுகையில், "வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா காங்கிரஸில் சேருவது அல்லது தேர்தலில் போட்டியிடுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். வினேஷ் போகத் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளார். பஜ்ரங் புனியா ஒரு புகழ்பெற்ற மல்யுத்த வீரராகவும் இருந்துள்ளார். ஆனால் விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு விஷயங்கள். அதே நேரத்தில் அவர்கள் அரசியலுக்கும் நல்லதைக் கொண்டு வருவார்கள் என்று நான் நம்புகிறேன்." என்று கருத்து தெரிவித்தார்.
மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பின் மூன்றாவது முகமான சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருடன் சேர்ந்து ஏமாற்றம் அடைந்ததாகக் குறிப்பிட்டார். காங்கிரஸில் சேருவதற்கான அவர்களின் முடிவை "அவர்களின் தனிப்பட்ட விருப்பம்" என்றும் அவர் குறிப்பிட்டார். "நாம் தியாகம் செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன். நமது போராட்டம், பெண்களுக்கான போராட்டம் என்று தவறான பெயர் வரக்கூடாது. என் முடிவில் இருந்து, போராட்டம் தொடர்கிறது. எனக்கும் சலுகைகள் கிடைத்தன, ஆனால் நான் தொடங்கியதை இறுதிவரை கொண்டு செல்ல விரும்பினேன். மல்யுத்த கூட்டமைப்பை சுத்தம் செய்து, பெண்கள் மீதான சுரண்டல் முடிவுக்கு வராத வரை, எனது போராட்டம் தொடரும்." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.