திருப்பதியில் தற்போது ஐப்பசி மாத உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, தீபாவளியன்று நடத்தப்படவுள்ள சிறப்பு உற்சவங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி அஸ்தனம் நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக வியாழக்கிழமைகளில் வழக்கமாக நடத்தப்படும் திருப்பாவாடை உற்சவம் ரத்து செய்யப்படுகிறது என தேவஸ்தானம் கூறியிருந்தது. அதன்படி, தீபாவளி அஸ்தனம் காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளது. தீபாவளி அஸ்தனம் நடைபெறுவதால், கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், தீபாவளியன்று மாலை 5 மணிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடத்தப்படுகிறது. இது நிறைவு பெற்றதும் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி தாயார்களின் மாட வீதியுலா சேவை நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில், அக்டோபர் 31-ஆம் தேதி விபிஐ தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 30-ஆம் தேதி முதல் சுவாமி தரிசனம் மற்றும் தங்கும் இடம் போன்ற சேவைகளுக்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது எனவும், பக்தர்கள் சார்பில் ஒத்துழைப்பு அளிக்குமாறும் தேவஸ்தான நிர்வாகம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாள்தோறும் திருப்பதிக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவதாகவும், உண்டியல் காணிக்கையாக ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை வசூலாகிறது எனவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“