ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டிணத்தில் இந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனத்தில் ராட்சத கிரேன் நொறுங்கி விழுந்து 11 பேர் சனிக்கிழமை உயிரிழந்தனர். ராட்சத கிரேன் நொறுங்கி விழுந்தபோது பதிவான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், விசாகப்பட்டிணத்தில் இந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனத்தில் இன்று ராட்சத கிரேன் நொறுங்கி விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ராட்சத கிரேனை பழுதுபார்த்த ஆப்பரேட்டர்கள் அதை பரிசோதித்தபோது திடீரென கிரேன் நொறுங்கி விழுந்தது. இதில் பலரும் சிக்கிக்கொண்டனர் என்று விபத்து குறித்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த அனுபம் கிரேன்ஸ் நிறுவனத்தால் இந்த 70 டன் கிரேன் கட்டப்பட்டது. ஆனால், அது செயல்படவில்லை. கிரேனின் சுமை தாங்கும் திறன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வி வினய் சந்த், கிரீன்ஃபீல்ட் நிறுவனத்திற்காக கிரேன் செயல்பாடுகளை ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் (எச்.எஸ்.எல்) அவுட்சோர்சிங் செய்துள்ளது. இது பராமரிப்பு பணிகளுக்காக முன்னணி பொறியாளர்கள் மற்றும் குவாட் 7 நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது என்று கூறினார்.மேலும், “இன்று காலை அவர்கள் கிரேன் சுமை திறனை சோதித்துக்கொண்டிருந்தபோது, அடிப் பகுதி மற்றும் மேல்பகுதியை பிரித்தபோது கிரேன் சரிந்தது. கிரீன்ஃபீல்ட் நிறுவனத்தின் 3 ஊழியர்கள், 2 முன்னணி பொறியாளர்கள் மற்றும் குவாட் 7 நிறுவன ஊழியர் ஒருவர் உட்பட 10 பேர் இந்த கேபினில் இருந்தனர். கேபின் விபத்துக்குள்ளானதில் அவர்கள் அனைவரும் இறந்தனர். இன்னும் அடையாளம் காணப்படாத மற்றொருவரும் இறந்துவிட்டார்” என்று வினய் சந்த் கூறினார்.
இந்த விபத்தில் அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் அலட்சியம் ஏற்பட்டதா என்று கண்டறிய இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், எச்.எஸ்.எல் இந்த விபத்து குறித்து அதற்கு இணையான விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும், கிரேனில்ல் இருந்த 11 பேரும் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நடைபெறும்போது, அங்கே பொருத்தப்பட்ட வீடியோவில், ராட்சத கிரேன் திடீரென பயங்கர சத்தத்துடன் நொறுங்கி விழும் காட்சி பதிவாகியுள்ளது. ராட்ச கிரேன் நொறுங்கி விழும் விடியோ சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிரச் செய்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"