அயோத்தியில் பேரணி : பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல், அங்கு எப்போது ராமர் கோவில் கட்டப்படும் என்ற கேள்வி தான் ஒவ்வொரு இந்துத்துவா அமைப்பினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.
1992ம் ஆண்டு ராம ஜென்மபூமி என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த பாபர் மசூதியை இந்து அமைப்பினர் உடைத்து தரைமட்டமாக்கினர். இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்தது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி- பாபர் மசூதி அமைக்கப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சரி சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என கடந்த 2010-ல் தீர்ப்பளித்தது.
இதற்கு தெரிப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இந்து மகா சபை அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.
ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த வழக்கினை அவசர வழக்குகாக விசாரிக்க இயலாது என்று கூறி, விசாராணை ஜனவரி மாதம் தான் நடைபெறும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் மீது இந்து அமைப்புகளான சங் பரிவார் மற்றும் விஷ்வ ஹிந்து பரிசாத் மிகவும் அதிருப்தியில் இருக்கின்றன.
அயோத்தியில் பேரணி
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமர் கோவிலைக் கட்டக் கோரி பேரணியாக அயோத்திக்கு இந்து அமைப்பினர் படையெடுத்து வருகிறார்கள்.
நாளைக்கு லட்சக்கணக்கானோர் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாபர் மசூதி சுற்றுவட்டாரப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படிருக்கிறது. நாளை விஷ்வ ஹிந்து பரிசாத் இயக்கத்தின் தர்மசபையின் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் நேரடிப் பங்கு ஏதுமில்லை என்பது குறிப்பிடதக்கது.
அயோத்தி நகருக்குள் இந்துத்துவா அமைப்பினரை உள்ளே நுழையவிடாமல் தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமர் கோவிலை கட்டியே ஆக வேண்டும் என இந்து மத சாமியார்கள் அதி தீவிரமாக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாளை அயோத்தி, நாக்பூர், மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் ஊர்வலங்கள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ராமர் கோவில் கட்டவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் - இந்து சாது