திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடு: ஆந்திரா அமைச்சர் தகவல்

பக்தர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னரே, முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர மாநில இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மாணிக்கியால ராவ் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டிற்கு இருமுறை மட்டுமே பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கும்படியான நடவடிக்கையை விரைவில் கொண்டு வர வேண்டும் என்று ஆந்திரா அமைச்சர் மணிக்கயால் ராவ் தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நாள் தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் திருப்பதியில் தஞ்சம் அடைகின்றன. எனவே இதனை சமாளிக்க புதிய கட்டுபாட்டை விதிக்க இருப்பதாக அமைச்சர் மணிக்கயால் ராவ் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு முழுவதிலிருந்து லட்சகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதே போல், ஒருவரே பலமுறை சாமியை தரிசனம் செய்யும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் செய்யும் பக்தர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்” என்றார்.

எனவே, “இதனை கட்டுப்படுத்த விரைவில் புதிய கட்டுபாடு கொண்டுவரப்படவுள்ளது. ஆதார் அட்டை மூலம் இணைத்து முதன்முறையாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது. அதன் பின்பு வாய்ப்பு இருந்தால் கூடுதல் தரிசனத்திற்கு அனுமதிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இதன்படி ஆண்டுக்கு இருமுறை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து விரைவில் பக்தர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னரே, முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர மாநில இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மாணிக்கியால ராவ் தெரிவித்துள்ளார்.

×Close
×Close