ஜனாதிபதியின் ஒப்புதலை வாபஸ் பெற கேட்கும் மத்திய அமைச்சகம் : தாகூர் நிறுவிய பல்கலைக்கழகத்தில் சர்ச்சை

குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு ஒருவரை நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.முன்னெப்போதும் இல்லாத வகையில், உயர்பதவிக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தபிறகு அதனை மறுபரிசீலனை செய்யுமாறு, குறிப்பிட்ட அமைச்சகம் கோரிக்கை விடுப்பது ஆச்சரியத்தை தருவதாக உள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சாந்திநிகேதனில் அமைந்துள்ளது விஸ்வபாரதி பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் பார்வையாளராக குடியரசு தலைவரும், வேந்தராக பிரதமரும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டின் இறுதியில், இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பிற்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூன்று பேரை பரிந்துரைத்து குடியரசு தலைவர் மாளிகைக்கு அனுப்பிவைத்தது.

அதில், வேளாண் விஞ்ஞானியும், அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக (பொறுப்பு) உள்ள ஸ்வபன் குமார் தத்தா, மத்தியபிரதேச மாநிலம் இந்தோரில் அமைந்துள்ள தேவி அஹில்யா விஷ்வவித்யாலயாவில் நிர்வாக துறை பேராசிரியர் பி.என்.மிஸ்ரா, கோரக்பூர் ஐஐடியில் நிலவியல் துறை பேராசிரியர் சங்கர் குமார் நாத் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், ஜனவரி இறுதியில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக (பொறுப்பு) பதவியிலுள்ள ஸ்வபன் குமார் தத்தாவையே துணைவேந்தராக நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியாகவில்லை.

இந்நிலையில்தான், ஸ்வபன் குமார் தத்தாவை நியமிக்க அளித்த ஒப்புதலை மறுபரிசீலனை செய்யுமாறு, குடியரசு தலைவருக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், அப்பதவிக்கு முன்பு அளித்த பரிந்துரைகளை திரும்ப பெற்றுக்கொண்டு புதிய பரிந்துரைகளை அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு, உயர்பதவிக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தபிறகு அதனை மறுபரிசீலனை செய்யுமாறு, குறிப்பிட்ட அமைச்சகம் கோரிக்கை விடுப்பது இதுவே முதன்முறை என கருதப்படுகிறது.

ஏற்கனவே, 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரூர்கியில் உள்ள ஐஐடியின் தலைவராக அனில் ககோத்கரை நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை இன்று வரை குடியரசு தலைவர் அலுவலகம் வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில், அனில் ககோத்கரை நியமிக்க அளித்த ஒப்புதலை மறுபரிசீலனை செய்யுமாறு மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கோரிக்கை விடுக்கவில்லை.

பின்னணி:

கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் எழுந்த முறைகேடு புகார் காரணமாக, அப்போது துணைவேந்தராக இருந்த சுஷந்தா தத்தா குப்தாவை அப்போதைய ஸ்மிருதி இராணி தலைமையிலான மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பதவியிலிருந்து நீக்கியது. மத்திய பல்கலைக்கழகமொன்றின் துணைவேந்தர் அரசால் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும். இதையடுத்து, ஸ்வபன் குமார் தத்தா அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பு வகித்து வருகிறார்.

ஸ்வபன் குமார் தத்தா பல்கலைக்கழகம் தொடர்பாக எடுக்கும் நிர்வாக முடிவுகளை எதிர்த்து பேராசிரியர்கள் பல சமயங்களில் போராட்டம் நடத்தி வந்திருக்கின்றனர். இந்நிலையில், ஸ்வபன் குமார் தத்தாவை நிரந்தரமாக துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என ஒருதரப்பு பேராசிரியர்களும், புதிய துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என மற்றொரு தரப்பு பேராசிரியர்களும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினர்.

கவிஞர், எழுத்தாளர் என பன்முகம்கொண்ட ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்ட கல்வி நிறுவனம் விஸ்வபாரதி பல்கலைக்கழகம். திரை கலைஞர் சத்யஜித் ரே, பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் ஆகியோர் இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களாவர். பிரதமரே வேந்தராக உள்ள ஒரேயொரு பல்கலைக்கழகம் விஸ்வபாரதி பல்கலைக்கழகம் தான். இத்தகைய பெருமைவாய்ந்த பல்கலைக்கழகத்தின் உயபதவியான துணைவேந்தர் பொறுப்பில் இவ்வளவு சர்ச்சை நிலவுவது கல்வித்துறையில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்க மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தொடர்புகொள்ள முடியவில்லை. உயர்கல்வி துறை செயலாளர் கே.கே.சர்மா, கூடுதல் செயலாளர் சுக்பீர் சிங் சந்து ஆகியோரும் இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. குடியரசு தலைவரின் ஊடக செயலாளர் அசோக் மாலிக் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close