வாக்களிக்க ஓட்டர் ஸ்லிப் மட்டும் போதாது என்றும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட, ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாக்குச் சாவடிக்கு வரும் போது கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில், “அரசியல் பிரமுகர்களுடனான ஆலோசனையில், ஓட்டர் ஸ்லிப்பில் போதிய பாதுகாப்பு வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. அதனால் வெறும் வாக்காளர் சீட்டோடு அனுமதிக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது.
அதனால், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி மற்றும் தபால் நிலைய கணக்கு புத்தகம், பான் கார்டு, பதிவாளர் ஜெனரலால் அளிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தால் அளிக்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு உள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் புள்ளி விபர கணக்குப்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 99% பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவற்றை கவனத்தில் வைத்து தான் ஓட்டர் ஸ்லிப் மட்டும் போதாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.