இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சர்தார் படேலின் 143வது பிறந்த நாளன்று அவரை கௌரவிக்கும் வகையில், குஜராத்தில் அவரின் 182 மீட்டர் உயரம் கொண்ட சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
உலகின் மிக உயரமான சிலை என்று சொல்லப்படும் இது, அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர தேவியின் சிலையை விட இரண்டு மடங்கு உயரமானது. இந்த சிலையை உருவாக்க 2,989 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.சீனாவில் இருக்கும் புத்தர் சிலைதான், உலகின் உயரமான சிலை என்று இதுவரை பெயர் பெற்றிருந்தது. தற்போது நிறுவப்பட்டுள்ள படேலின் சிலை, புத்தர் சிலையை விட 177 அடி உயரமானதாக இருக்கும்.
சிலையின் 193 வது மீட்டரில், மக்கள் பார்க்குபடி வசதி செய்து தரப்பட்டுள்ளது. அந்த உயரத்திலிருந்து சர்தார் சரோவர் அணை, அதன் நீர்பிடிப்புப் பகுதி, விந்திய மலைத் தொடர் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.
சிலையின் அடிவாரத்தில், சர்தார் படேலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலே செல்ல இரண்டு உயர் வேக லிஃப்ட்டும் பொருத்தப்பட்டுள்ளது..படேல் அருங்காட்சியகத்தில், 40,000 ஆவணங்கள், 2000 புகைப்படங்கள், ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா இடமாக படேல் சிலை அமைக்கப்பட்டுள்ள நர்மதா நதிகரையோரம் பார்க்கப்படுகிறது.
சிலை திறக்கப்பட்டதை அடுத்து, ஒரு நாளைக்கு 15,000 பார்வையாளர்கள் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதில் அதிகப்படியான வெளிநாட்டவர்களும் ஆவர். சரி நம்ம இந்தியாவில், நாட்டிற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த படே சிலையை எப்படி சுற்றி பார்ப்பது, வழிதடங்கள், ஆகும் செலவு என முழு விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Sardar Vallabhbbhai Patel, Statue of Unity Tourist Guidelines: எப்படி செல்வது?
குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது.இங்கு விமான சேவை, ரயில் மற்றும் சாலை வழியாகவும் செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வதோதரா சர்வதேச விமான நிலையத்திலும், ரயில்வே ஸ்டேஷன் நிலையத்திலும் இருந்து இரண்டு மணிநேரத்தில் சென்று விடலாம். அகமதாபாத்திலிருந்து 198 கி.மீ., மற்றும் சூரத்திலிருந்து 156 கி.மீ. தொலைவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் இங்கு சுற்றுலாவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தினங்களில் காலை 9 மணி முதல் 6 மணி வரை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு வசதி:
படேல் சிலை,அருங்காட்சியம் என அனைத்தையும் சுற்றிப்பார்க்க சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் தங்களின் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இதோ அதற்கான வலைதளப்பக்கம். www.soutickets.in.
வருகை தரும் சுற்றுலா பயணிகள் மியூசிக் மற்றும் ஆடியோ விஷுவல் கேலரி, லேசர் லைட் மற்றும் சவுண்ட் ஷோ, கண்காணிப்பு டெக் பார்வை, மலர் மற்றும் படகு சேவைகள் ஆகியவற்றை பார்வையிடவும் உங்களுக்கான விருப்பமான நேரத்தை ஒதுக்கி முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
அருங்காட்சியகம் மற்றும் ஆடியோ விஷுவல் கேலரி, சிலை, அணை ஆகிய அனைத்திற்கும் சேர்த்து ரூபாய் 1000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 3 - 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு 350 ரூபாய் கட்டணமாக நிர்ணிக்கப்பட்டுள்ளது.