வடக்கு காஷ்மீரில் இருக்கும் குப்வாரா பகுதியில் ஒரு குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் காஷ்மீர் காவல் படையிலும், ராணுவத்திலும் வேலை செய்து வருகிறார்கள்.
மூத்தவர் பெயர் வாசிம் மாலிக், ஆசிப் மாலிக் அவர்களுக்கு அடுத்ததாக இருப்பவர் பெயர் காலித் கஃப்பர் மாலிக். இவர்களுக்கு அடுத்து தலிப் ஹூசைன் மாலிக் என்பவரும் அதற்கு பிறகு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள்.
வாசிம் மாலிக், ஜம்மு காஷ்மீர் மாநிலக் காவல் படையில் கான்ஸ்டபிளாக இருக்கிறார். ஆசிப், தங்க்தர் பகுதியில் ராணுவ படையில் இருக்கிறார். தலிப், டெர்காம் பகுதியில் கான்ஸ்டபிளாக மிக சமீபத்தில் பணியில் சேர்ந்தார்.
கடந்த வாரம், பிரிவினைவாதிகளின் அழைப்பை ஏற்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் முழு அடைப்பு இருந்தது. வாசிமும், தலிபும் அவர்களின் பணியினை மேற்கொள்ள சென்றுவிட்டார்கள். அன்று ஆசிபிற்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் இருந்தார்.
மாலை ஐந்தரை வரை இந்த முழு அடைப்பு அமுலில் இருந்தது. ஆனால் எங்கும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அதற்கான பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பிய தலிப், 7 மணி அளவில் முடிவெட்ட கடைக்கு சென்றிருக்கிறார். அந்நேரத்தில் ஊருக்குள் வந்த ராணுவம் அனைவரின் கடைகளையும் மூடச் சொன்னது. நாங்கள் மூன்று எண்ணுவோம் அதற்குள் கடையை மூடவேண்டும் என்று சொல்லிவிட்டு சுட ஆரம்பித்துவிட்டது.
அந்நேரத்தில் வீட்டிற்கு பால் வாங்கிக் கொண்டு திரும்பிய காலித் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. வீட்டிற்கு செல்ல 50 மீட்டர் தொலைவே இருந்த நிலையில் இப்படியான ஒரு துயர சம்பவம் நடந்துவிட்டது. யாரையும் அவன் அருகில் வரவிடவில்லை. ராணுவத்தினர் திரும்பிய பின்பு தான் காலித்தினை தூக்கிக் கொண்டு மருத்துவமனை சென்றுள்ளனர். ஆனால் அங்கே அவன் உயிர் பிரிந்துவிட்டதாக கூறிவிட்டார்கள்.
காலித்தின் கொலை தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டது மாநில அரசு. முதல் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது, அதில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு ரூபாய் 500 அபராதம் என்று குறிப்பிட்டிருந்தது.
கை நடுக்கத்துடன் அதைப் படித்த வாசிம் “என் தம்பி உயிரின் விலை வெறும் 500 தானா? இந்த வீட்டில், நாட்டிற்கு சேவை செய்யும் மூவர் இருக்கும் போதே எங்களுக்குக் கிடைத்த நீதி இது தானா? என்று தழுதழுத்த குரலில் கேள்வி கேட்கின்றார். “என்னுடைய தம்பி கல்லெறிதல் போன்ற பிரச்சனைகளுக்கும் கூட போகாதவன்” என்று குறிப்பிட்டு மிகவும் வருத்தத்துடன் பேசினார்.
பொதுமக்கள் இது பற்றி குறிப்பிடும் போது “துப்பாக்கிச் சூடு நடைபெறப் போகிறது என்பதற்கான முன்னறிவிப்பினை அவர்கள் தரவே இல்லை” என்று குறிப்பிட்டார்கள்.