சிலை உடைப்பு பற்றி பிரதிபலிக்கும் பெருமாள் முருகனின் கவிதைக்கு பாடகர் டி.எம் கிருஷ்ணா இசை வடிவம் கொடுத்து பாடியுள்ள வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
திரிபுரா மாநிலத்தில், ஆட்சியை கைப்பற்றி 48 மணி நேரத்தில், பாஜக ஆதரவாளர்களால் அங்குள்ள லெனின் சிலை உடைக்கப்பட்டது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்து என்றும் எவரும் கணித்திருக்க மாட்டார்கள். லெனின் சிலையை போல் விரைவில் தமிழ்நாட்டில் பெரியார் சிலையும் தகர்த்தெறியப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வன்முறையையும் தூண்டினார்,
அவரின் இந்த பதிவிற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், இளைஞர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின்பு, பெரியார் பதிவை போட்டது அட்மின் என்று அவரும் சரணடைந்தார். பின்பு இந்த சர்ச்சை மெல்ல தணிந்தது.
அதற்குள், ராம ரத யாத்திரை தமிழ்நாட்டில் புகுந்தது.இந்துத்துவா அமைப்புகள் நடத்திய இந்த ரத யாத்திரைக்கு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்து அடுத்த எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டிற்கு பரீட்சைப்படாத ஒன்றை பாஜகவினர் திணிக்க பார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அந்த நேரத்தில் தான், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டது. எனவே, தற்போதைய சூழலில் சிலை உடைப்பு அரசியல் என்பது தமிழகத்தில் மேலூங்கி வருவது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. இதை அப்படியே பிரதிபலிக்கும் வகையில், பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒரு கவிதையை எழுதியுள்ளார்.
இந்த எழுத்து வடிவத்திற்கு உயிர் வடிவம் கொடுக்கும் வகையில், பிரபல கர்நாடக பாடகர் டி.எம் கிருஷ்ணா இசை வடிவம் கொடுத்துள்ளார். கவிதைக்கு இசையமைத்து, அவர் பாடி வெளியிட்டுள்ள வீடியோவில் சில முக்கியமான கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது,
“ சமீப காலமாக இந்தியா எங்கும் பரவலாக சிலை உடைப்பு என்கிற பெயரில் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. லெனின், அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வன்முறையை நிகழ்த்துபவர்கள் ஒற்றைச் சித்தாந்தத்தைப் பின்பற்றும் ஓர் அழகற்ற இந்தியாவை நிர்மாணிக்க நினைக்கிறார்கள்.
அதை நாம் தான் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். சிலைகளைச் சேதப்படுத்தியதன் வழியாக வன்முறையாளர்களும் அவர்களுக்குத் துணை நின்றவர்களும், தங்களால் வெவ்வேறு சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதையே நமக்கு உணர்த்துகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
டி.எம் கிருஷ்ணாவின் இந்த உணர்ச்சி மிகுந்த பாடல், பலரிடம் இருந்தும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதோ அந்த பாடல்..
https://www.youtube.com/watch?time_continue=118&v=6m38MHTIjHI
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.