வீடியோ: யாருக்கு அரசு வேலை? ‘டாஸ்’ போட்டு முடிவு செய்த பஞ்சாப் அமைச்சர்

பஞ்சாபில் அரசு வேலையை கொடுப்பதில் இருவருக்குள் போட்டி நிலவிய நிலையில், கல்வித்துறை அமைச்சர் ‘டாஸ்’ போட்டு முடிவு செய்தார்.

பஞ்சாபில் அரசு வேலையை கொடுப்பதில் இருவருக்குள் போட்டி நிலவிய நிலையில், கல்வித்துறை அமைச்சர் ‘டாஸ்’ போட்டு முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் போட்டி தேர்வு மூலம் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியாணை வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சரன்ஜித் சிங் சன்னி கலந்துகொண்டு பணியாணைகளை வழங்கினார்.

அப்போது, பாட்டியாலாவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விரிவுரையாளர் பணிக்கு நபா மற்றும் பாட்டியாலாவை சேர்ந்த இரு பட்டதாரிகளிடையே கடும் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது. இதனால், என்ன செய்வதென்று அங்கிருந்தவர்கள் திகைக்க, அமைச்சர் சரன்ஜித் சிங் ‘டாஸ்’ போட்டு அதில் வெல்பவருக்கு பணியை கொடுக்க முடிவு செய்தார்.

அவ்வாறு, நாணயத்தை வைத்து அமைச்சர் ‘டாஸ்’ போடும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெரிட் அடிப்படையிலேயே பணியாணைகள் வழங்கப்பட்டுள்ளதால், தான் செய்தத்தில் தவறேதும் இல்லை என, அமைச்சர் சரன்ஜித் சிங் விளக்கமளித்துள்ளார். ”குறிப்பிட்ட பணிக்கு சம தகுதியையுடைய இருவரும் போட்டியிட்டனர். அதனால், ‘டாஸ்’ போட்டு தேர்ந்தெடுக்குமாறு அவர்கள் இருவரும் கூறியதாலேயே நான் அவ்வாறு செய்தேன்”, என அமைச்சர் கூறியுள்ளார்.

×Close
×Close