வீடியோ: ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரியை உடல் ரீதியாக கேலி செய்த அமைச்சர் மேனகா

அமைச்சர் மேனகா காந்தி, ஊழல் புகாருக்குள்ளான அதிகாரியை உடல் ரீதியாக கேலி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, ஊழல் புகாருக்குள்ளான அதிகாரியை உடல் ரீதியாக கேலி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால், மேனகா காந்தி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பஹேரியில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பொதுமக்களின் புகார்களை கேட்டறியும் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, அரசு அதிகாரி ஒருவருக்கு எதிராக மக்கள் ஊழல் புகார்களை முன்வைத்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த மேனகா காந்தி அந்த அதிகாரியை வசைபாடினார். அப்போது, அந்த அதிகாரி உடல் பருமனாக இருப்பதை சுட்டிக்காட்டும் விதத்தில் மேனகா காந்தி கேலி செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமைச்சர் மேனகா காந்தி இவ்வாறு சர்ச்சையில் சிக்குவது முதன்முறை அல்ல. ஏற்கனவே, கடந்த 2016-ஆம் ஆண்டு, ராஜ்ய சபாவில், திருமணத்தின் பெயரால் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவது குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமணத்தின் பெயரால் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவது குறித்து போதிய புகார்கள் வந்தால் மட்டுமே, தனது அமைச்சகம் அதனை சட்டவிரோதமான செயலாக கருதும் என அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close