8ம் தேதி குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணம் அடைந்தனர். விபத்தில் உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங், சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள காமெண்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். சாலை வழியாக பாதி தூரம் வரை அழைத்து வரப்பட்ட அவரை வான்வழி போக்குவரத்து மூலம் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வருண் சிங் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். அவருடைய உடலில் நிறைய காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் உள்ள வசதிகள் சிறப்பாக உள்ளது. விரைவில் வருண் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அவருடைய தந்தை ஓய்வு பெற்ற கார்னல் கே.பி. சிங் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். விபத்து நடந்தவுடன் வருணுக்கு வெலிங்க்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

போபாலில் வசிக்கும் அவருடைய தந்தை, சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய மகன் போனில் அழைத்ததை நினைவு கூறினார். “எப்போதும் போல் அழைக்கப்படும் அழைப்பு தான் அது. என்னிடமும் அவருடைய அம்மாவிடமும் வருண் பேசினார். முப்படைத் தளபதி வெலிங்க்டன் டிபென்ஸ் கல்லூரிக்கு வருவது அப்போது திட்டமிடப்படவில்லை என்றே நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.
“தன்னுடைய குக்கிராமத்திற்கு சாலை வசதி தேவை” – உத்ரகாண்ட் முதல்வரிடம் கோரிக்கை வைத்த பிபின்
வருணின் சித்தப்பா அகிலேஷ் பி சிங் இது குறித்து பேசும் போது, “வருண் பூரண நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று எங்களின் குடும்பமே பிரார்த்தனை செய்கிறது. இந்த நிகழ்வு எங்கள் அனைவருக்கு பெரிய அடியாக உள்ளது” என்று கூறினார். உ.பியின் ருத்ராப்பூர் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏவான அவர், வருண் மிகவும் புத்திசாலியான மாணவனாக இருந்தார் என்றும் நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்பதே அவருடைய ஆசையாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
“மிகவும் சிறிய வயதிலேயே தன்னுடைய இலக்கு இது தான் என்று அவர் தீர்மானம் செய்து வைத்திருந்தார். அதனால் தான் நேசனல் டிபென்ஸ் அகாடெமியில் முதல் முயற்சியிலேயே உள்ளே சென்றுவிட்டார். நாங்கள் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தோம். அனைவரும் அவ்வளவு நெருக்கமாக இருந்தோம். வருணின் தந்தையும் அவரது வேலையும் தான் எங்களை பிரித்தது. ஆனாலும் நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம்” என்று அகிலேஷ் கூறினார்.

ராணுவ குடும்பத்தில் இருந்து வந்த வருணின் சகோதரர் இந்திய கப்பற்படையில் பணியாற்றுகிறார். அவருடைய அப்பா ராணுவ விமான பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற கார்னல் ஆவார். மிகவும் சமீபத்தில் தான் குரூப் கேட்பனாக பதவி உயர்வு அடைந்து வெலிங்க்டனில் அவருக்கு பணி வழங்கப்பட்டது. அவருக்கு 2 குழந்தைகள் உள்ளன.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங் வீரதீர செயலுக்காக விருது பெற்ற வீரர்
2020ம் ஆண்டு விபத்தில் சிக்க இருந்த இலகுரக ராணுவ விமானம் தேஜஸை பத்திரமாக தரையிறக்கி உயிர்களை காப்பாற்றியதற்காக இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அன்று சவுரிய சக்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். காக்பிட்டில் ஏற்பட்ட அழுத்தக் குறைபாடு காரணமாக விமானம் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்தது. அந்த விமானத்தின் விங் கமாண்டராக பணியாற்றிய வருண் விமானத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு என்ன என்பதை சரியாக கணித்து விமானத்தை குறைந்த உயரத்தில் பறக்க ஆரம்பித்தார். 17 ஆயிரம் அடியை கடக்கும் போது விமானத்தின் கட்டுப்பாட்டு சிஸ்டமில் உள்ள நான்கில் மூன்று சேனல்கள் செயல் இழந்து விமானம் முழுமையான கட்டுப்பாட்டை இழந்தது. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டிருக்கும் கோளாற்றை சரி செய்ய தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து ஜி லிமிட்டை கடந்து விமானத்தை செலுத்தி தரையிறக்கினார் என்று அவருக்கு வழங்கப்பட்ட விருதுக்கான சான்றில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil