இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை நாங்கள் சுடவில்லை என நாதூராம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையை அடுத்த மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பெரியபாண்டியன்(48). சென்னை கொளத்தூரில் ஒரு நகைக் கடையில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன வழக்கில் குற்றவாளிகளை பிடிக்கும் தனிப்படையில் இடம் பெற்றிருந்தார்.
ஆய்வாளர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் உள்ளிட்ட 5 போலீஸார் இடம்பெற்ற தனிப்படையினர் கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்துக்கு சென்றனர். அங்கு நாதுராம் என்ற பிரபல கொள்ளையனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டுக்கு இரையானார். முதலில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியானார் என்று கூறப்பட்டது.
பிறகு இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கி தவறி விழுந்ததில் கொள்ளையர்கள் அதை எடுத்து சுட்டு விட்டதாக கூறப்பட்டது. ராஜஸ்தானில் இருந்து வந்த ஒவ்வொரு தகவலும் முன்னுக்குப்பின் முரணாகவே வந்தது. ராஜஸ்தான் போலீஸ் விசாரணையில் தமிழக போலீசார் தான் சுட்டனர் என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தனிப்படையினர் சென்னை வந்ததும், உயர் போலீஸ் அதிகாரிகளும் முனிசேகரிடம் விசாரணை நடத்தினார்கள். முனிசேகரின் துப்பாக்கி குண்டு தான் பெரியபாண்டியின் உடலை துளைத்து இருக்கிறது என்று ராஜஸ்தான் போலீசார் கூறிய போதும், ‘முனிசேகர் என் கணவரின் நெருங்கிய நண்பர். அவர் சுட்டு இருக்க வாய்ப்பு இல்லை’ என்று நம்ப மறுத்தார் பெரியபாண்டியின் மனைவி பானுரேகா.
இந்த நிலையில், போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் நாதுராம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பதுங்கி இருந்ததை செல்போன் டவர் மூலம் ராஜஸ்தான் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் நாதுராமின் நடமாட்டத்தை அங்குலம் அங்குலமாக கண்காணித்த ராஜஸ்தான் போலீஸார், பாலி எஸ்பி தீபக் பார்கவ் தலைமையில் குஜ்ராத் மாநிலத்துக்கு சென்றனர்.
ராஜ்கோட்டுக்கு சென்ற போலீஸார் அவனை நெருங்கும் போது நாதுராம் தன் கையில் இருந்த துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டுவிட்டு, காரில் ஏறி தப்பிச்சென்றார். இதையடுத்து நாதுராமின் காரை போலீஸார் துரத்திச் சென்றனர். காரை தொடர்ந்து சென்ற போலீஸார் காரை நோக்கி 3 ரவுண்டு சுட்டனர். இதனால் காரின் டயர் பஞ்சராகி நின்றது.
இதைத் தொடர்ந்து, நாதுராம் மற்றும் உடனிருந்த கூட்டாளி சுரேஷ் மேகுவால் இருவரையும் போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் ராஜஸ்தான் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை நாங்கள் சுடவில்லை என நாதூராம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், துப்பாக்கி சத்தம் கேட்ட உடன் ஓடிவிட்டதாக ராஜஸ்தான் போலீஸ் விசாரணையில் நாதூராம் தகவல் தெரிவித்துள்ளார்.