பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பான வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்களுக்குப் பதிலளித்த பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கோரினார். இந்த விவகாரத்தில் ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோரின் மன்னிப்பை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தெரிவித்தது.
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்புகள், தேன், ஷாம்பு போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த பொருட்களுக்கான விளம்பரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. பதஞ்சலி நிறுவனம் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாகவும், அதேபோல அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் செய்வதாகவும், நிறுவனத்தின் மருந்துப்பொருள்களின் விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் வழங்கு தொடரப்பட்டது.
பதஞ்சலி ஆயுர்வேதா லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, "விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது. பதஞ்சலி நிறுவனத்தின் பொய்யான மற்றும் தவறான விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து விளம்பரங்கள் வெளியிடப்பட்ட நிலையில் மீண்டும் நீதிமன்றம் தலையிட்டு விளம்பரங்களை நிறுத்த உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக பாபா ராம்தேவ் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியது. ஆனால் அவர் பதிலளிக்க வில்லை.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், "பாபா ராம்தேவின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் என்ன... இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்குப் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ், நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்" என காட்டமாகத் தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் மன்னிப்பு கோரினர் ஆனால் நீதிமன்றம் அதை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/supreme-court-patanjali-misleading-ad-case-9261739/
ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா சார்பில் ஆஜரான முகுல் ரோஹத்கி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக கூறினார். இதற்கு நீதிபதி கோஹ்லி, "நீதிமன்றத்தால் பிடிபட்ட பிறகு அவர்கள் அதை காகிதத்தில் மட்டுமே கூறியுள்ளனர். நாங்கள் அதை ஏற்கவில்லை, மறுக்கிறோம். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் என்று கூறினார்.
செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ராம்தேவ், "எதிர்காலத்தில் மிகவும் விழிப்புடன் இருப்பேன்" என்று உறுதியளித்திருந்தார்.
அதில் “விளம்பரச் சிக்கல் தொடர்பான வழக்கில் நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருகிறேன். இந்த தவறுக்கு நான் உண்மையிலேயே வருந்துகிறேன், மேலும் இது மீண்டும் நடக்காது என்று மாண்புமிகு நீதிமன்றத்திற்கு உறுதியளிக்க விரும்புகிறேன் ”என்று ராம்தேவ் பிரமாணப் பத்திரத்தில் கூறி இருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இதை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.