ஜம்முவில் கடந்த வியாழக்கிழமை காஷ்மீர் பண்டிட்களின் கடைகள் இடிக்கப்பட்டன. இவர்கள் அப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறியதாக கூறப்படும் நிலையில், ஜம்மு மேம்பாட்டு ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘We have lost everything’: Kashmiri Pandits’ shops demolished in Jammu, political storm brews
ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஜம்மு மேம்பாட்டு ஆணையம் மறுத்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க ஆப்னி கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், காஷ்மீர் பண்டிட் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய கடைகள் கட்டிக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை ஜம்முவின் முன்னாள் முதலமைச்சரான மெஹபூபா முஃப்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "பல தசாப்தங்களாக கற்பனை செய்ய முடியாத கஷ்டங்களை அனுபவித்து வரும் சமூகத்திற்கு மற்றொரு அடி" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பழங்குடியின மக்களின் சொத்துகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் தற்போது காஷ்மீர் பண்டிட்கள் வரை தொடர்கிறது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், ஒரு முதியவர் அழுதுகொண்டே “எங்கே போவோம்? நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்” எனக் கூறுகிறார்.
ஜம்மு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் பங்கஜ் சர்மா கூறுகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனவரி 20 ஆம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் பிப்ரவரி இறுதிக்குள் நிலத்தை காலி செய்வதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததாகவும் கூறினார். எனினும், தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முத்தி பகுதியில் குடியேறிய காஷ்மீர் பண்டிட்கள் முதலில் 25 கானல் இடங்களில் ஒரு அறை கொண்ட வீடுகளில் தங்கியதாகவும், பின்னர் அவர்கள் மறுவாழ்வு அடிப்படையில் புர்கூ மற்றும் ஜக்தி பகுதிகளில் இரண்டு அறைகள் கொண்ட வீடுகளில் குடியமர்த்தப்பட்டதாகவும் ஷர்மா தெரிவித்துள்ளார். எனினும், பலர் தாங்கள் முதலில் குடியேறிய இடங்களை காலி செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்காக 208 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக அந்த இடம் பின்னர் அடையாளம் காணப்பட்டதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் முடிவடைந்ததால், ஏலதாரரிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் சர்மா கூறினார். ஆக்கிரமிப்புகளை இடிப்பதற்கு முன்பாக அனைவருக்கும் தெரியப்படுத்தியதாகவும், சிலர் மட்டுமே பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிவாரண ஆணையர் அரவிந்த் கர்வானி அப்பகுதிக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அப்பகுதியில் புதிய கடைகள் கட்டப்படும் என்று உறுதியளித்தார்.
“இந்த கடைகள் ஜம்மு மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமான நிலத்தில் இருந்தன. முத்தி முகாம் இரண்டாம் கட்டத்தில் வணிக வளாகம் கட்ட நிவாரண அமைப்பு டெண்டர் எடுத்துள்ளது. பத்து கடைகள் விரைவில் கட்டப்பட்டு, அவை சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படும்,'' என அரவிந்த் கர்வானி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் கதறி அழும் வீடியோக்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் அதிர்வலைகளை கிளப்பியது.
ஜே & கே அப்னி கட்சியின் தலைவர் அல்தாஃப் புகாரி தனது எக்ஸ் தள பக்கத்தில், “இடிப்பது அவசியமானால், நிர்வாகம் முதலில் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் ஏமாற்றமளிக்கின்றன. குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், அதன் குடிமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஜி.எல். ரெய்னா குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.