Advertisment

தேர்தல் பத்திரம் முறை ரத்து: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முன் ரூ. 8,350 கோடி பத்திரம் அச்சிட்ட மத்திய அரசு

உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கும் முன்பு வரை மத்திய அரசு தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 8,350 பத்திரங்களை அச்சிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
In weeks before Supreme Court scrapped scheme and Govt printed electoral bonds worth Rs 8350 crore Tamil News

ஓய்வு பெற்ற கமடோர் லோகேஷ் கே பத்ரா தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை அளித்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Electoral Bonds: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வகைசெய்யும் தேர்தல் பத்திரத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. அது சட்டவிரோதமானது மற்றும் அரசியல் அமைப்புக்கு எதிரானது. எனவே, தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது என கடந்த 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியது. 

Advertisment

இந்நிலையில், டிசம்பர் 29, 2023 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 15 வரை, அதாவது உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கும் முன்பு வரை மத்திய அரசு தலா ஒரு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 8,350 பத்திரங்களை அச்சிட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக, இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2018 முதல், மத்திய அரசு ரூ. 35,660 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அச்சிட்டுள்ளது. இதில், தலா ரூ. ஒரு கோடி மதிப்பு கொண்ட 33,000 பத்திரங்களும், தலா ரூ.10 லட்சம் மதிப்பு கொண்ட 26,600 பத்திரங்களும் அடங்கும். 

இந்த தகவலை ஓய்வு பெற்ற கமடோர் லோகேஷ் கே பத்ரா தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை அளித்துள்ளது.

அந்த ஆர்.டி.ஐ பதிலின்படி, கமிஷன் மற்றும் தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கு அரசுக்கு ரூ. 13.94 கோடி செலவாகியுள்ளது. அதே நேரத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) விற்பனைக்கான கமிஷனாக ஜி.எஸ்.டி உட்பட ரூ.12.04 கோடியை வசூலித்ததுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 30 கட்டங்களில், நன்கொடையாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் எந்தவித கமிஷன் அல்லது ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், "தேர்தல் பத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் அரசியலமைப்பிற்கு எதிரானது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம், அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கருப்புப் பண விவகாரத்தைக் கையாள்வதற்கான மத்திய அரசின் நியாயப்படுத்தல் நியாயமானது அல்ல." என்றும் தெரிவிக்கப்பட்டது. 

2023-24 நிதியாண்டிற்கான அரசியல் கட்சிகளின் வருடாந்திர அறிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்றாலும், மார்ச் 2018 மற்றும் ஜனவரி 2024 க்கு இடையில், தேர்தல் பத்திரங்களின் விற்பனை மூலம் திரட்டப்பட்ட நிதியின் மொத்த அளவு ரூ.16,518 கோடி ஆகும். இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் வழங்கப்பட்ட நிதியில் பாதிக்கும் மேற்பட்டவை பா.ஜ.க-வுக்கு சென்றுள்ளது. 2017 மற்றும் 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் 6,565 கோடி ரூபாய் பத்திரங்கள் மூலம் அக்கட்சி பெற்றுள்ளது. இதற்கு அடுத்தாற்போல் 1,123 கோடியுடன் காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

232 பக்கங்கள் கொண்ட இரண்டு தனித்தனி ஆனால் ஒருமித்த உச்சநீதிமன்ற தீர்ப்புகளில், தேர்தல் பத்திரம் விநியோகிப்பதை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ வங்கி) உடனே நிறுத்த வேண்டும் என்றும், 2019 ஏப்ரல் 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்குப் பிறகு வாங்கப்பட்ட அனைத்துப் பத்திரங்களின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவல்களை மார்ச் 13க்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிடும் என்றும் உத்தரவிட்டது. 

தற்போதுவரை  நிச்சயமற்றது என்னவென்றால், எஸ்.பி.ஐ வங்கி பகிரும் தரவுகள் ஒரு வடிவத்தில் வழங்கப்படுமா என்பது ஒருவருக்கு உடனடியாக பத்திரம் வாங்குபவரை அதே பத்திரத்தைப் பெற்ற அரசியல் கட்சியுடன் பொருத்த உதவும்.

தற்போதைய நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் உயர் பதவிகளில் இருக்கும் தனிநபர்கள் அரசியல் கட்சிகளுக்கு முதன்மையான நன்கொடையாளர்கள் என்று கருதப்படுகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 30 கட்டங்களில் வாங்கப்பட்ட 94% தேர்தல் பத்திரங்களின் ஒவ்வொன்றின் மதிப்பும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் தேர்தல் ஆணைய பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: In weeks before Supreme Court scrapped scheme, Govt printed electoral bonds worth Rs 8,350 crore

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Electoral Bonds
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment