மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசில் இடம் பெற்றுள்ள 7 எம். எல். ஏக்கள், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சியை சேர்ந்த 3 எம். எல். ஏக்கள் என மொத்தம் 10 பேர் நேற்று மித்னாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவில் இணைந்தனர்.
சுவேந்து அடிகாரி (டி.எம்.சி எம்.எல்.ஏ, முன்னாள் மாநில அமைச்சர்): முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருங்கிய வட்டாரங்களில் செயல்பட்டு வந்ததாக கருதப்பட்டவர். தனது 20 வயதில் காங்கிரஸ் சத்ரா பரிஷத் அமைப்பில் தலைவரானார்.1996-ல் மிட்னாபூர் கூட்டுறவு அமைப்புகளின் இயக்கத்தில் கலந்து கொண்டார். விவசாயிகளிடமிருந்து நிலத்தை கைப்பற்ற நந்திகிராம், சிங்கூரில் இடதுசாரிகள் வன்முறையை கையாண்ட போது, திருணாமுல் கட்சியின் நந்திகிராம் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 2011 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் திருணாமுல் ஆட்சியைக் கைப்பற்றியதில் சுவேந்து அடிகாரி முக்கிய பங்கு வகித்தார். 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தம்லூக் பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்டார். 2016 ல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இரண்டாவது அமைச்சரவையில் முக்கிய உறுப்பினராக இருந்தார்.
சுனில் குமார் மொண்டல் (திருணாமுல் எம்.பி.): ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2011ல் கால்சி சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்து கொண்டு, 2014 ல் மாநிலங்களவைத் தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தார். இதனையடுத்து, திருணாமுல் காங்கிரஸ் கட்சியோடு தன்னை இணைத்துக் கொண்டார். பாஜகவில் இணைந்த திரிணமுல் காங்கிரசின் முன்னாள் பொதுச் செயலாளரும் ,முகுல் ராயின் நெருங்கிய கூட்டாளி என்று அறியப்படுகிறது.
சில்பத்ரா தத்தா: பாரத்பூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில்பத்ரா தத்தா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தாம் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் சத்ரா பரிஷத்தின் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2006 இல், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திருணாமுல் கட்சியில் இணைந்தார். 2011, 2016 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாரத்பூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தப்சி மொண்டோல் (சிபிஎம்- எம்எல்ஏ): 2016 சட்டமன்றத் தேர்தலில்,மெடினிபூர் மாவட்டத்தின் ஹால்டியா சட்டமன்ற தொகுதியில் இடது முன்னணி வேட்பாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அசோக் டிண்டா (சிபிஐ எம்எல்ஏ): முன்னாள் சிபிஐ தலைவரான டிண்டா, 2016 ல் பூர்பா மிட்னாபூரின் தம்லூக் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பூர்பா மிட்னாபூர் மாவட்டத்தில் சிபிஐயின் முகமாக விளங்கியவர்.
சுதீப் முகர்ஜி (காங்கிரஸ் எம்.எல்.ஏ): 2016 சட்டமன்றத் தேர்தலில் புருலியா சட்டமன்ற தொகுதியில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்டார். மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிகுந்தவராகவும் இருந்தார்.
சைக்கத் பஞ்சா (டி.எம்.சி எம்.எல்.ஏ): அவரது தந்தையும், மந்தேஸ்வர் தொகுதி எம்.எல்.ஏ சஜால் பஞ்சா காலமானதையடுத்து, 2016 நவம்பரில் நடந்த இடைத்தேர்தலில் மந்தேஸ்வர் பேரவைத் தொகுதியில் திரிணமூல் வேட்பாளராக சைகாத் பாஞ்சா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தீபாலி பிஸ்வாஸ் (டி.எம்.சி எம்.எல்.ஏ): 2016 சட்டமன்றத் தேர்தலில், காசோல் சட்டமன்றத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக தீபாலி பிஸ்வாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுவேந்து அடிகாரி மால்டா தொகுதி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட பிறகு , 2016 ல் திருணாமுல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் .
சுக்ரா முண்டா, பிஸ்வாஜித், பனாஸ்ரீ மைட்டி ஆகிய எம். எல். ஏக்களும் மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தாங்கள் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக, மித்னாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைசச்சர் அமித் ஷா, "மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் 200 -க்கும் அதிகமான இடங்களில் பிஜேபி வெற்றிபெறும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஊழலை மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அறிந்துள்ளதாகவும் இதன் காரணமாக ஒவ்வொரு தலைவர்களாக கட்சியை விட்டு வெளியேறிவருவதாக அவர் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.