மேற்கு வங்க பா.ஜ.க போராட்டம்
2021 தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியின் மிகப்பெரிய பிரச்சாரங்களில் ஒன்றான நபன்னா அபியானுக்கு (செயலகத்திற்கு அணிவகுப்பு) கொல்கத்தாவை அடைய முயன்ற பா.ஜ.க தொண்டர்களுக்கு எதிரான மேற்கு வங்க காவல்துறை நடவடிக்கை செவ்வாய்க்கிழமை காலை தொடர்ந்தது, ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பல மாவட்டங்களில் கைது செய்யப்பட்டனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, லாக்கெட் சாட்டர்ஜி, தாப்ஷி மோண்டோல் மற்றும் திபாங்கர் கராமி உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படியுங்கள்: தமிழிசைக்கு ஏற்பட்ட நிலைதான்… அனைத்து மாநில ஆளுனர்களையும் எச்சரித்த தி.மு.க!
ஹல்டியா, நந்திகிராம் போன்ற பல இடங்களில் பாஜக தொண்டர்களின் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பா.ஜ.க.,வின் திட்டத்தின்படி, மூன்று புள்ளிகளிலிருந்து பேரணிகள் மாநில செயலகமான நபன்னாவை அடைய முயற்சித்தது. சுவேந்து அதிகாரி சத்ரகஞ்சியில் இருந்து ஒரு பேரணிக்கு தலைமை தாங்க, கட்சியின் மாநில தலைவர் சுகந்தா மஜும்தார் ஹவுரா மைதானத்தில் இருந்து ஒரு பேரணிக்கு தலைமை தாங்குகிறார். முன்னாள் மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் கல்லூரி தெருவில் இருந்து தொண்டர்களை வழிநடத்தினார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை விமர்சித்த சுவேந்து அதிகாரி, “ஜனநாயக அரசியல் நிகழ்வை நசுக்க மம்தா காவல்துறை போர்க்கால அடிப்படையில் முயற்சிக்கிறது. சந்த்ராகாச்சியில் எழுப்பப்பட்ட இரும்பு தடுப்பு அவரது கவலை மற்றும் பயத்தை குறிக்கிறது. நினைவில் கொள்ளுங்கள் மம்தா, எந்த சுவரும் ஜனநாயக அலைக்கு எதிராக நிற்க முடியாது, அது விரைவில் உடைக்கப்படும், ”என்று ட்வீட் செய்துள்ளார்.
காங்கிரஸ் கதை முடிந்தது – கெஜ்ரிவால்
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கதை "முடிந்தது" மற்றும் ஆம் ஆத்மி குஜராத்தில் உள்ள "அனைத்து இடங்களிலும்" இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அகமதாபாத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி சம்பளம் தருவதில்லை என்றும், அதற்கு பதிலாக குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பணத்தை பயன்படுத்துகிறது என்றும் காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து ஒரு நிருபர் அவரிடம் கேட்டபோது, ”காங்கிரஸ் கதை முடிந்துவிட்டது. அவர்களின் கேள்விகளை நீங்கள் நிறுத்த வேண்டும். பொதுமக்கள் மனதில் இதுபோன்ற கேள்விகள் எதுவும் இல்லை,” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
EWS இடஒதுக்கீடு – உச்ச நீதிமன்றம் விசாரணை
அரசாங்க வேலைகள் மற்றும் சேர்க்கைகளில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய அரசியலமைப்பு (103 வது திருத்தம்) சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுகிறதா என்பது குறித்த வாதங்களை உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று கேட்கத் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து, மனுதாரர்கள் சார்பில் சட்ட அறிஞர் ஜி மோகன் கோபால், “103வது திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தை ஏமாற்றும் செயலாகும். சாதி ரீதியாக நாட்டை பிளவுபடுத்துகிறது என்பதே அடிமட்ட உண்மை. பலவீனமானவர்களைக் காட்டிலும் சலுகை பெற்றவர்களைக் காக்கும் ஒன்றாக அரசியலமைப்பின் அடையாளத்தை இது மக்கள் மனதில் மாற்றும்" என்று கூறினார்.
இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்திவாலா, பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
நாகா தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நாகா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக நாகா தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த தூதுக்குழுவிற்கு நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ தலைமை தாங்கினார்.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகா பிரச்சனைகளை அனைத்து பங்குதாரர்களும் திருப்திப்படுத்தும் வகையில் தீர்க்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
“மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று புதுதில்லியில் நாகாலாந்து முதல்வர் ஸ்ரீ நெய்பு ரியு தலைமையில் நாகா குழுக்களின் அரசியல் தலைமையின் பரந்த அளவிலானவர்களை சந்தித்தார். கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. நாகா பிரச்சனைகள் குறித்த பேச்சுக்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன... இந்திய அரசின் முயற்சிகள் நாகா பேச்சுவார்த்தையில் உள்ள பல சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம்
குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2019 அல்லது CAA க்கு எதிரான மனுக்களை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பும் என்றும், இந்த விஷயத்தில் மேலும் உத்தரவுகளை அக்டோபர் 31 அன்று வெளியிடும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில், இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், இந்த விஷயத்தில் சுமார் 200 மனுக்களை எடுத்து, நடைமுறை சம்பிரதாயங்களை முடிப்பதற்கான வழிமுறைகளை வழங்கியது.
இந்த மனுக்களுக்கு மத்திய அரசு தனது பதிலைத் தாக்கல் செய்யுமாறு கூறிய பெஞ்ச், அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்களிடமும் குறிப்பிட்ட மனுக்களுக்கு பதில் அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.