ராஜஸ்தானில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி! ஒரு இடம் கூட வெல்லாத ஆளும் பாஜக

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆளும் ராஜஸ்தானில், மூன்று இடங்களிலும் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மற்றும் அல்வார் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளிலும், மண்டல்கர் சட்டமன்ற தொகுதியிலும் கடந்த 29ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேநாளில், மேற்கு வங்கத்தின் உலுபெரியா நாடாளுமன்ற தொகுதி மற்றும் நவுபாரா சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 5 இடங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ராஜஸ்தான் மாநிலத்தில், அஜ்மீர் மற்றும் அல்வார் நாடாளுமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ரகு ஷர்மா மற்றும் கரண் சிங் யாதவ் ஆகியோர் அபார வெற்றி பெற்றனர்.

மண்டல்கர் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் முதல் சில சுற்றுகள் முன்னிலை பெற்ற நிலையில், கடைசி இரண்டு சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தாகத், 12 ஆயிரத்து 976 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். இதேபோல், மேற்கு வங்காளத்தின் உலுபெரியா நாடாளுமன்ற தொகுதி மற்றும் நவுபாரா சட்டமன்ற தொகுதியில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர். இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 5 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.

×Close
×Close