பாஜகவை வீழ்த்த வியூகம்: திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் மம்தா!

இந்த சந்திப்பு அரசியல் குறித்த சந்திப்பாகத்தான் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு  நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரவுள்ள நிலையில்,  திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, விரைவில் வரவுள்ள  நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய அளவில் பா.ஜ.க-வை வீழ்த்த மற்ற எதிர்க்கட்சிகளுடன் கைகோத்துள்ளார்.  இதன் தொடக்கமாக, அனைத்து எதிர்க்கட்சித் தலைவரையும் முக்கியப் பிரமுகர்களையும் தொடர்ந்து  சந்தித்து வருகிறார்.

முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சியை சந்தித்து, அவர்கள் பாஜகவுக்கு எதிராக கொண்டுவர இருந்த நம்பிக்கையில்லாத்  தீர்மானத்துக்கு தானும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். பின்னர், டெல்லி சென்று  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தி.மு.க எம்.பி., கனிமொழி, சிவசேனா கட்சியின் எம்.பி., சஞ்சய் ராவத் உள்ளிட்டோரை மம்தா சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், அரசியலில் அடுத்தக்கட்ட நகர்வாக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். ஏப்ரல் 10 மற்றும் 11 நாட்களில் மம்தா  தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த சந்திப்பு அரசியல் குறித்த சந்திப்பாகத்தான் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும், கருணாநிதியை சந்தித்தப் பின்பு,  திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உடன், மம்தா ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

×Close
×Close