West Bengal Chief Minister Mamata Banerjee : இந்திய அரசியல் வரலாற்றில் பெண்களின் பங்கு மிகக் குறைவு. சுதந்திரம் அடைந்த பிறகு மிக விரைவாக பெண் பிரதமரை கூட பார்த்துவிட்டோம். ஆனால் பெண் குடியரசு தலைவர் கிடைக்க 60 ஆண்டுகள் ஆனது. வடக்கில் ஷீலா தீட்சித், சுஷ்மா சுவராஜ், அனந்தி பென் படேல், வசுந்திரா ராஜே, மெகபூபா முஃப்தி என பலர் வந்து சென்றனர். ஆனால் தெற்கில் பெண் தலைவர்கள் எண்ணிக்கை என்னவோ தேய்ந்து தான் போனது. ஜானகிக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறகு பெண் முதல்வர்கள் என்ன, பெண் தலைவர்கள் கூட அரிதாகிப் போகினர்.

ஆனால் இன்றும் மேற்கு வங்கம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நன்கு பரீட்சையமான ஒரு முகமாக மாறி வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. மோடிக்கு எதிராக குரல் கொடுப்பதாகட்டும், சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில ஒப்புதலை ரத்து செய்ததாகட்டும், தேர்தல் பிரச்சாரத்தின் போது இரு சக்கர வாகனம் ஓட்டி பழகியதாக இருக்கட்டும் டாப் கியரில் “அரசியல் கிராஃபில்” முன்னேறி வருகிறார் மமதா.

நம்மூரில் எப்படி சூரியனுக்கு வழிபாடு நடத்தி பொங்கலிட்டு அறுவடை திருநாளை கொண்டாடுவோமோ அப்படியே ஜனவரி மாதம் மகர சங்கராந்தி அன்று சாகர் தீவில் சாகர்மேளே என்ற திருவிழா நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற இந்த நேரத்தில் சாகர்மேளா நடத்தப்படும் என்று கூறியுள்ளார் மமதா. அங்கே விழாவிற்கான ஏற்பாடுகள் எப்படி நடைபெற்று வருகிறது என்பதை பார்க்க கங்காசாகர் சென்றுள்ளார் மமதா.

28,29,30 ஆகிய தினங்களில் அவர் கங்காசாகரில் தன்னுடைய பணிகளை தொடர்வார் என்று கூறப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் நேற்று மமதா ஷாப்பிங் சென்றுள்ளார். கங்காசாகரில் கைவினைப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்யும் இடத்திற்கு நேரில் சென்ற அவர் கைவினைக் கலைஞர்களை பாராட்டியுள்ளார்.

மக்களோடு மக்களாக சராசரி நபர் போல் மமதா அங்கே சென்று மக்களிடம் பேசியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்படக் கலைஞர் பார்தா பாலின் கை வண்ணத்தில் க்ளிக் செய்யப்பட்ட புகைப்படங்கள் இதோ.

சாகர்மேளா ஜனவரி 8ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. தெற்கு 24 பார்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த சாகர் தீவு. சாகர் தீவில் இந்த திருவிழாவுக்கு நேஷ்னல் டேக் வழங்க வேண்டும் என்று மமதா தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். கும்பமேளாவிற்கு தரப்படும் முக்கியத்துவம் ஏன் இந்த விழாவிற்கு தரப்படவில்லை என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil