மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்து வருகிறார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் ஒரே கட்டத்தில் இன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டன. இந்த தேர்தலில், 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக உள்ளனர். 22 ஜில்லா பரிஷத்துகளுக்கான 928 இடங்கள், பஞ்சாயத்து சமிதிகளுக்கான 9,730 இடங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கான 63,239 இடங்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
Advertisment
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மாநிலம் முழுதும் பரவலாக வன்முறை வெடித்தது. வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட மோதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூச் பெஹார் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் சேதப்படுத்தப்பட்டும், வாக்குச் சீட்டுகளுக்கு தீ வைக்கப்பட்டன.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், நதியா, முர்ஷிதாபாத் மற்றும் மால்டா மாவட்டங்களில் நடந்த தனித்தனி சம்பவங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூச் பெஹாரில் பா.ஜ.க வாக்குச் சாவடி முகவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் நேற்று மாலை படுகாயமடைந்த சிபிஐ(எம்) தொண்டர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். வடக்கு 24 பர்கானாஸின் கடம்பகாச்சியில் நடந்த மோதலில் சுயேச்சை வேட்பாளரின் மற்றொரு ஆதரவாளர் படுகாயமடைந்தார். அந்த நபர் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இருப்பினும், அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பராசத் மாவட்ட போலீஸ் எஸ்பி பாஸ்கர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆதரவாளரான முதியவர் ஹாஜி நியாகத் ஷேக் காலை வாக்களிக்கச் சென்றபோது ஏற்பட்ட மோதலில் காயமடைந்தார். அவர் மதியம் இறந்தார். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நௌடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் பல்வேறு மாவட்டங்களில் மக்களைச் சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்து வருகிறார். வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்த அவர், “இது நம் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்த வேண்டும். இது ஜனநாயகத்திற்கு மிகவும் புனிதமான நாள். வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்பட வேண்டும், தோட்டாக்கள் மூலம் அல்ல.'' என சில வாக்குச் சாவடிகளில் மத்தியப் படைகள் இல்லை என்று கூறப்படும் செய்திகளுக்கு மத்தியில், மாநில தேர்தல் ஆணையர் ராஜீவ சின்ஹா, மாவட்ட நீதிபதிகள் அனைத்து பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் நிலை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
வாக்குப்பதிவை பாதுகாப்பாக நடத்துவதை உறுதி செய்வதற்காக, 59,000 மத்திய ஆயுதக் காவல் படையினர் (சிஏபிஎஃப்) மற்றும் பிற மாநில ஆயுதக் காவல் படையினர் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பி.எஸ்.எஃப்-ன் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil